சிஷ்யனின் உண்மையான ரூபத்தை
அவனுக்கு உணர்த்துவதே குருவின் பணி.
ஒரு பெண் புலி ஒரு ஆட்டு மந்தையின் மீது பாய்ந்தது. அப்பொழுது அது கருவுற்றிருந்தது. பாய்ந்த வேகத்தில் ஒரு குட்டியை ஈன்று விட்டு இறந்து விட்டது. அது முதல் அந்த குட்டிப் புலி ஆட்டு மந்தைகளுடனே இருந்ததால் அதுவும் புல்லைத் தின்று 'பே, பே' என்று கத்திக் கொண்டு இருந்தது.
ஒரு நாள் ஒரு பெரிய புலி இந்த ஆட்டு மந்தையை தாக்க முற்பட்டது. அங்கு இந்த குட்டி புலி ஆடுகளோடு ஆடாக புல் சாப்பிடுவதை கண்டு ஆச்சரியம் அடைந்தது.
உடனே அது அந்த குட்டி புலியை கவ்வி இழுக்க, அது 'பே, பே' என்று கத்தியது. பெரிய புலி அதை ஒரு குளக்கரைக்கு இழுத்து சென்று,
'இந்த தண்ணீரில் உன் உருவத்தைப் பார். என்னைப் போலவே அல்லவா இருக்கிறாய், இப்பொழுது இந்த சிறிய மாமிச துண்டை சாப்பிடு'
என்றது.
சொல்லிக்கொண்டே ஒரு மாமிசத் துண்டை அதன் வாயில் திணித்தது. முதலில் 'பே, பே' என கத்திக் கொண்டு அதைத் தின்ன மறுத்த குட்டி, சிறிது ரத்தத்தின் சூசி அதற்கு தெரிந்தவுடன் சந்தோஷமாக அந்த மாமிசத்தை சாப்பிட ஆரம்பித்தது.
அதைக் கண்ட பெரிய புலி, "நீயும் நானும் ஒரே இனம். இப்பொழுது புரிந்து கொண்டாயா, வா, என்னுடன் காட்டிற்கு!" என்று தன்னுடன் அதை அழைத்து சென்றது.
இக்கதையின் நீதி :
குருவின் அருள் எல்லாவித பயங்களையும் போக்கி உண்மையில் நீ யார், உனது உண்மை ரூபம் என்ன என்பதை காட்டிக் கொடுக்கும்.
குருவின் வழியை பின்பற்றி நடப்போம் !
வாழ்வில் முன்னேறுவோம் !!