நிறைநீர நீராவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு. (குறள் - 782)
பொருள்:
அறிவுடையார் நட்பு வளர்பிறை போன்ற தன்மையுடையது. அறிவில்லாதவர்களின் நட்பு தேய்பிறை போல் குறையும் தன்மையுடையது.
கதை :
ஒரு மானும் காகமும் நண்பர்களாய் இருந்தன. காட்டிலே அடர்த்தியான புற்களைத் தின்று கொழு கொழுவென்று இருந்த மானைக் கொன்று தின்ன நினைத்து சமயம் பார்த்து காத்திருந்தது ஒரு நரி.
மான் அருகே எவராவது வந்தால் "கா.... கா...." எனக் குரல் கொடுக்கும் காகம். மறுகணம் மான் துள்ளியோடி மறைந்து விடும். ஒருநாள் நரி, நிறைய பசும் புற்களை வாயில் கவ்விக் கொண்டு வந்து மானின் முன் போட்டது.
மான் சந்தேகக் கண்களோடு "எனக்கு ஏன் புல் பிடுங்கிப் போடுகிறாய்?" எனக் கேட்டது.
"நேற்று உன் காலில் முள் குத்தியதும், காகம் தன அலகால் அதைப் பிடுங்கியதும் எனக்குத் தெரியும். உனக்கு இன்று காலில் வலி இருக்குமே... அதனால் தான்! என்னையும் உங்கள் நண்பனாக ஏற்றுக் கொள்ளக் கூடாதா?" என்று கேட்டது நரி .
"நீ எங்களுக்கு நண்பனாவதா? இதில் ஏதோ சூழ்ச்சி உள்ளதே" என சொல்லியது மான்.
"அடிபட்ட மானின் புண்களை காக்கைகள் கொத்துவதில்லையா? காக்கை நண்பனாகலாம். நான் ஆகக்கூடாதா ?" என்று நரி விவாதித்தது. மான் கொஞ்ச நேரம் யோசித்தாலும் பிறகு ஒப்புக்கொண்டது.
நரி சென்ற பிறகு காகம் கோபமாக, "உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லை. நரியோடு சினேகம் வைத்துக் கொள்ளலாமா?" என்று கடிந்து கொண்டது.
"எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கக் கூடாது. காகங்களில் நீ நல்லவனாக இல்லையா... அது போல நரியிலும் நல்லவர்கள் இருக்கலாம். இந்த நரி உபகாரமானது. எனக்கு நிறைய புல் கொண்டு வந்து போட்டது." என்று நரிக்குப் பரிந்து பேசியது மான்.
காகம் மௌனமாய் இருந்தது.
ஆனாலும் மானை நிழல் போல காத்து வந்தது.
அந்த நரியை ஒரு வேடன் வளர்த்து வந்தான். நரி இப்படியே காட்டு விலங்குகளிடம் நயவஞ்சகமாக நட்பு கொண்டு வேடன் வலை விரித்த இடத்திற்கு அழைத்து வந்து விடும். வேடன், இறைச்சியில் நான்கில் ஒரு பங்கை நரிக்குக் கொடுப்பான்.
ஒரு நாள் மானிடம், "பச்சை பசும்புல் காண்பிக்கிறேன்" என்று ஆசைகாட்டி வலையில் மாட்ட வைத்துவிட்டது நரி.
"நண்பா, என்னை விடுவித்து விடு!" என்று மான் கண்ணீரோடு கேட்க, நரி, "நான் இன்று விரதம். தோல் கடிக்க மாட்டேன். வலையையும் கடிக்க மாட்டேன். நாளைக்கு நிச்சயம் வருகிறேன்." என்று சொல்லிவிட்டு ஒரு செடி மறைவில் பதுங்கிக் கொண்டது.
மானைத் தேடி வந்தது காகம்.
"நண்பா... இதில் எப்படி சிக்கிக் கொண்டாய்" என்று வருத்தத்துடன் கேட்டது.
"ஆராயாத நட்பு ஆபத்தை விளைவிக்கும் என்று நீ சொன்ன போது நான் கேட்கவில்லை. கடிந்து நலம் உரைக்கும் உன் நட்பு நிஜமானது. இனிக்க இனிக்க பேசும் நரியின் நட்பு விஷம் போன்றது என்பதை என் அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன்" என்று கண்ணீருடன் கூறியது மான்.
"வீண் பேச்சு வேண்டாம். நீ செத்தது போல் கிட. நான் உன்னை கொத்துகிறேன். வேடன் வலையை உதறி சுருட்டிக் கட்டும் சமயம் நான் குரல் கொடுக்கிறேன். நீ ஓடிவிடு." என்றது காகம்.
மூச்சடக்கி, கண் மூடிச் சாய்ந்தது மான். காகம் அதைக் கொத்துவது போல் பாவனை செய்தது. வேடன் வந்தான். காகம் மரக்கிளைக்குப் பறந்தது. வலையை உதறிச் சுருட்டிக் கட்டும்போது காகம் குரல் கொடுத்தது. மான் மின்னல் வேகத்தில் ஓடியது. ஆத்திரமடைந்த நரி, செடியின் மறைவிலிருந்து மானை விரட்டப் பாய்ந்தது.
ஏமாந்த வேடனும் அதே சமயம், கம்பை வீச, கம்பு எதிரில் வந்த நரியின் தலையைத் தாக்கி, நரி அக்கணமே உயிர் நீத்தது.
மானும், காகமும் இணை பிரியா நண்பர்களாய் வாழ்ந்தன. கெடுவான் கேடு நினைப்பான் என்பது எத்தனை உண்மையாயிற்று பார்த்தீர்களா ?
ஆகையால், குழந்தைகளே நாம் எப்போதும் நல்ல குணம் கொண்டவர்களையே நண்பர்களாக்கி கொள்ள வேண்டும் என்பது இந்த கதையின் மூலம் அறிவோம் அல்லவா...
"Friend in Need is a Friend in Deed"
someone who helps you when you are in need is a true friend
someone who helps you when you are in need is a true friend