பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற 
செய்யாமை செய்யாமை நன்று. (குறள் - 297)

Slokas for Kids - Don't tell lie Story

பொருள்: 
பொய் பேசாமலிருப்பது சிறந்த அறம். அதை நிஜமாகவே கடைபிடிப்பவர்களுக்கு தர்மங்கள் செய்யத் தேவையே  இல்லை.

கதை :
கோசல நாட்டில் தேவதத்தன் என்பவன் குழந்தை பேறு வேண்டி ஓர் நதிக்கரையில் புத்திர காமேஷ்டி யாகம் செய்து வந்தான். 

சாம வேதம் சொல்ல கோபிலர் என்ற அந்தணர் நியமிக்கப்பட்டு இருந்தார். சாம வேதத்தை நன்றாக சொல்லக் கூடியவர் என்றாலும், வயதான காரணத்தாலும், தொடர்ந்து யாகப் புகை தாக்கியதாலும் இருமல் வந்து இடை இடையே இம்சை செய்தது. அதனால் இருமல் வராதபடி மெதுவாக வேத மந்திரங்களை சொன்னார் கோபிலர்.

தேவதத்தன் "சாம வேதம் சொல்ல வேறு ஆளே கிடைக்கவில்லையா? இவர் சொல்வது இங்கு இருப்பவர்களுக்கே கேட்காது. அப்புறமல்லவா வானுலகத்தில் உள்ள தேவதைகள் இதை கேட்டு மனம் குளிர்ந்து ஓடி வந்து அருள் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதற்கு! அறுசுவை விருந்தை சுவையாக சாப்பிடீர் அல்லவா ? தெம்பாக உரக்க கூறுங்கள் மந்திரத்தை" என்றான்.

கோபிலர் வெகு மானஸ்தர். கோபத்துடன் "தேவதத்தா ! நீ தரும் தட்சணைக்கும், விருந்துக்கும் ஏங்கி அலைபவன் நானல்ல ! யாகம் என்பது எப்போதும், எல்லோராலும் நடத்த முடியாது. தேவதைகள் மந்திரம் சொல்பவரையும் வாழ்த்துகின்றன என்பதால் ஒப்புக் கொண்டேன். ஆலோசிக்காமல் வார்த்தைகளைக் கொட்டின உனக்கு பேதையான மகன் தான் பிறப்பான். அவன் உன்னைப் போல் வார்த்தைகளை கொட்ட முடியாதபடி ஊமையாக இருப்பான்" என்று சபித்து விட்டார்.

தேவதத்தன் வருந்தி அழ, மற்ற பண்டிதர்கள் அவனைத் தேற்றினர். "கௌரவமான கோபிலர் சிங்கத்தைப் போன்றவர். யாகத்துக்கு நாங்கள் வேண்டி அழைத்து வந்தோம். இப்படிப் பேசலாமா ? சரி, முனிவரிடமே மன்னிப்புக் கேளுங்கள். சான்றோர் சினம் சில நிமிடங்களிலேயே கரைந்து விடும்" என்றனர்.

தேவதத்தனும் கோபிலர் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்து தன் தவறை மன்னித்து சாபத்தை மாற்றும்படி வேண்டினார்.

கோபம் தணிந்த கோபிலர், "சிறிது காலம் உனது மகன் பேதையாக ஊமையாக இருந்தாலும், பின்னர் பேச்சு வந்து வேத விற்பன்னனாக வருவான்" என்றார். யாகம் இனிதே நிறைவடைந்தது.

தேவதத்தனின் மனைவி ரோகிணி, பத்தாம் மாதத்தில் உதத்தயனை பெற்றெடுத்தாள். ஏழாவது வயதில் உபநயனம் செய்வித்தான் வேந்தன்.

"புத்திர காமேஷ்டி யாகம் செய்து பிறந்த பிள்ளை! காயத்ரி மந்திரம் கூட சொல்ல முடியாத ஊமை! எல்லாம் தேவதத்தனின் அகம்பாவம் ! முனிவர் சாபம் பொய்க்குமா? " என்று ஊரார் வம்பு பேசினர்.

அவனால் பேச முடியாது என்பதால் மற்ற குழந்தைகள் அவனை கிண்டல் செய்தனர். இதனால் மனம் கொதித்த தேவதத்தன் உதத்யனை வெளியே வரக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்தான்.

உதத்தியன் சிறுவன்னல்லவா? பெற்றோர் கவனமின்றி இருக்கும்போது வெளியே ஓடிவந்து விளையாடிக் கொண்டிருக்கும் மற்ற பிள்ளைகளிடம் தன்னையும் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளும்படி ஜாடை காட்டுவான்.

"திடீரென்று நாயொன்று உன் உணவைப் பறித்ததென்றால் உன் பெற்றோருக்கு எப்படி அதைத் தெரிவிப்பாய்? பலகாரம் நன்றாய் இருக்கிறது, இன்னும் வேண்டும் என்றால் எந்த மாதிரிச் சொல்வாய் ?" என்றெல்லாம் கேட்டு அவனது சைகைகளைப் பார்த்து சந்தோஷப் படுவார்கள் மற்ற சிறுவர்கள்.

இதை ரோகிணியோ, தேவதத்தனோ கண்டால் அவர்களின் ரத்தம் சூடேறும். "இப்படி ஓர் மட்டிப்பிள்ளை பிறந்தே இருக்க வேண்டாம்" என்று உதத்தியனை நொந்து கொள்வார்கள். ஒருநாள் பெற்றோரின் வசவு பொறுக்காமல் வீட்டை விட்டு வெளியேறினான் உதத்தியன். கங்கா நதி தீரத்தில் கிடைக்கும் காய் கனிகளை உண்டு வாழ்ந்தான். பொய் சொல்வதில்லை என்ற இலட்சியத்தை உதத்தியன் கடைபிடித்து வந்தான்.

அதனால் அங்குள்ளோர் அவனை சத்திய விரதன் என்று அழைத்தனர். உதத்தியன் என்று தன் பெயரை எழுதிக் காட்டுமளவுக்கு கூட அவன் படிக்கவில்லை.

இப்படியே 14 ஆண்டுகள் சென்றன. ஒருநாள் மான்  ஒன்று அம்பு தைத்து அவன் காலடியில் வந்து மயக்கமாகி சாய்ந்தது. அம்பு தைத்த இடத்திலிருந்து இரத்தம் பெருகியது. இரக்கமனம் கொண்ட உதத்தியன்  பேச முடியாமல் குரல் கொடுக்க "ஹ்ரூ ஹ்ரூ" என்ற சப்தமே வெளிப்பட்டது.

மயக்கம் நீங்கி எழுந்த மான் அருகிலிருந்த புதரில் ஒளிந்து கொண்டது. அப்போது ஒரு வேடன் இரைக்க இரைக்க ஓடி வந்தான். கருத்த உடல், கையில் வில், முதுகில் அம்புக்கூடு, கொடூரமான முகம் வியர்வை ஆறாக பெருகி இருந்தது.

"சத்யவிரதா! இந்தப் பக்கமாய் அம்பு பாய்ந்த உடலுடன் ஒரு மான் வந்ததா? நீ பொய் பேசாதவன் என்பது எனக்கு தெரியும். நேற்றிலிருந்து என் குடும்பம் பட்டினி, சீக்கிரம் சொல். இந்த மான் மாமிசம் தான், பசியால் தவிக்கும் என் குடும்பத்திற்கு உணவு" என்றான்.

"மானைக் காட்டினால் மானின் மரணத்தில் எனக்கும் பங்கு வரும். தெரியாது என்றால் பொய் சொல்லாத விரதம் முறியும். தேவி! இந்த தர்ம சங்கடத்திலிருந்து என்னைக் காப்பது உனக்குச் சிரமமென்றால் இந்த வினாடியே என் உயிரை உனக்கு அர்ப்பணிக்கிறேன்" என்று அம்பிகையைத் தியானித்தான்.

அம்பாளின் அருளால் "யா பஸ்யதி..." என்ற ஸ்லோகம் அவன் நாவில் வந்தது. அதைக் கேட்டு வேடன் ஏதும் பேசாமல் திரும்பிச் சென்றான். அதன் பிறகு மான் மேல் தைத்திருந்த அம்பைப் பிடுங்கி எறிந்து பச்சிலைச்சாறு பிழிந்து பெருகும் உதிரத்தை நிறுத்திக் கட்டுப்போட்டான் சத்தியவிரதன்.

அவன் சொன்ன ஸ்லோகத்தின் பொருள் "காண்பவரால் சொல்ல முடிவதில்லை! சொல்பவர்களால் காணப்படுவதில்லை!" இது இறைவனுக்கும் பொருந்தும்.

மடை திறந்த வெள்ளம்போல் ஸ்ரீவித்யா மந்திரங்களை மகன் உச்சரிப்பதைக் கேட்டு பெற்றோர் விரைந்து வந்து புதல்வனை அழைத்துச் சென்றனர். சத்தியம், உதத்தியனை கல்விக்கு ஒரு பொக்கிஷம் என்று அனைவராலும் கொண்டாட வைத்தது.

ஆகையால், அன்புக்குழந்தைகளே! நம் வாழ்வில் எந்த சூழலிலும் நாம் பொய் சொல்லக் கூடாது. அவ்வாறு நாம் இருந்தால் இறைவன் நம்மை என்றும் எல்லாவிதமான பிரச்சனைகளில் இருந்தும் காப்பார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை...

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe