பூமாதேவியின் மகனான நரகாசுரன் தன் தாயின் கையாலன்றி வேறு யாராலும் சாகாத வரத்தினைப் பெற்றான். அந்த ஆணவத்தால் பல துன்பங்களைக் கொடுத்தான். அவனை அழிக்க நினைத்த கிருஷ்ணர், தமது தேவியருள் ஒருவரான சத்தியபாமாவை உடன் அழைத்துச் சென்றார்.
சத்யபாமா, பூதேவியின் அம்சமாக அவதரித்தவள். நரகாசுரனோடு யுத்தம் செய்யும்போது கிருஷ்ணர் மயங்கிவிழுவதுபோல் நடிக்க, அவரைக் காப்பாற்ற, சத்தியபாமா நரகாசுரனை அழித்தாள். சாகும் தறுவாயில் நரகாசுரன் கேட்ட வரத்தின்படியே தீபாவளி கொண்டாடப்படுகிறது.
வனவாசம் முடித்து சீதையுடன் ராமர் அயோத்தி திரும்பிய தினமே தீபாவளி. பாற்கடலில் இருந்து தோன்றிய பார்கவியான மகாலட்சுமி மகாவிஷ்ணுவை மணந்த நாள்.
திரிவிக்ரமரால் பாதாள உலகில் அழுத்தப்பட்ட மகாபலி பூவுலகம் வரும்நாள், பாண்டவர்கள் தங்கள் ராஜ்யத்தை மீண்டும் கைப்பற்றிய தினம், இப்படிப் பல புராணக்கதைகள் உண்டு தீபாவளிக்கு.
தீபாவளியன்று யம தீபம் ஏற்றி யமனை வழிபடும் பழக்கமும் உண்டு. யமனின் சகோதரியான யமுனை தன் அண்ணனான யமனைப் பார்க்க வரும் தினம் என்றும், அன்றைய தினம் தீபம் ஏற்றி வணங்கினால் சகோதரர்கள் நீண்ட நாள் வாழ்வர் என்பதும் நம்பிக்கை.
பாற்கடலில் தோன்றிய திருமகளை அசுரர்கள் சிறைப்பிடிக்க நினைத்தனர். யமதர்மன் அதை முன்கூட்டியே அறிந்து அன்னையிடம் கூறினான். உடனே மகாலட்சுமிதேவி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த அகல்விளக்கில் எண்ணெயாக மாறி ஒளிந்து கொண்டாள். அங்கே வந்த அசுரர்கள் அன்னையைக் காணாமல் திரும்பிச் சென்று விட்டனர். பின்னர் பெருமாள் மோகினி அவதாரம் எடுத்து தேவர்களை அமுதத்தைக் கொடுத்து அசுரர்களை அழித்தார்.
பிறகே அன்னை எண்ணெயிலிருந்து வெளிப்பட்டாள். "எண்ணெயில் என்னை ஒளிய வைத்த காப்பாற்றியதால் தீபாவளி அன்று எண்ணெயில் நான் வாசம் செய்வேன். அதனால், தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக்குளித்தால் ஆயுள் பல மடங்கு அதிகரிக்கும்" என்று வரம் அளித்தாள். அதனை ஒட்டியே யமபூஜை செய்யும் வழக்கம் வந்ததாகவும் புராணக்கதை ஒன்று உண்டு.
தீபாவளி அன்று வடநாட்டினர் எம தர்ப்பணம் செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
தேவி பாகவதத்தில் வேறு ஒரு கதை உண்டு. பல யுகங்கள் முன்பாக உக்கிராசுரன் என்றொரு அசுரன் இருந்தான். அவன் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் செய்யாத கொடுமையே இல்லை என்னும் அளவுக்குத் தீயவனாக இருந்தான். அன்னை துர்க்கை அவனை எதிர்த்துப் போருக்குப் புறப்பட்டாள். ஒரு கட்டத்தில் அன்னையின் சைனியங்கள் அனைத்தும் சோர்ந்துவிட்டன.
அசுரன் அட்டகாசமாகச் சிரித்தபடி துர்க்காதேவியை நெருங்கினான். துர்க்கையின் முகத்திலிருந்து கோபமே வடிவாக காளி தோன்றி அசுரனை அப்படி விழுங்கி விட்டாள். உக்கிராசுரனை விழுங்கியதால் காளிதேவியின் சீற்றம் கட்டுக்கடங்காமல் சென்றுவிட்டது. நாக்கைத் தொங்கவிட்டபடி மூவுலகங்களிலும் சுற்றியலைந்தாள். கண்ணில் கண்ட மனிதர்களைத் தாக்க ஆரம்பித்தாள். உலகங்கள் நடுங்கின. உயிர்கள் யாவும் மிரண்டன.
அவளது சீற்றத்தை அடக்க சிவபெருமான் ஒருவரால்தான் முடியும் என்று தேவர்கள் அனைவரும் சென்று சிவனிடம் பிரார்த்தித்தனர். உலகைக் காக்க உடனே எழுந்தார் சிவபெருமான். உக்கிரமாக அலைந்து கொண்டிருந்த காளிதேவியின் முன்னால் புலித்தோல் ஆடையணிந்து, கைகளில் டமருகம், கழுத்தில் பாம்பு என்ற கோலத்தில் சென்றார். தன் எதிரே யாரோ ஒரு ஆண் வந்திருக்கிறான் என்று நினைத்த காளிதேவி. அவரைக் கீழே தள்ளி மிதிக்கப் போனாள்.
அப்போது தான் சிவனின் முகம் பார்த்தாள் அன்னை காளி. தான் காலால் மிதிக்க இருந்தது சிவ பெருமானை எனத் தெரிந்ததும் அன்னைக்கு சுயநினைவு வர, விழுந்து வணங்கினாள். சிவபெருமானும் அன்னையின் கோபத்தைத் தணித்து அவளை அழகிய காளியாக, அதாவது அங்காளியாக மாற்றினார். அந்தநாளே தீபாவளித் திருநாள் என்று கொண்டாடப்படுகி்றது.
தீபாவளி அன்று தீர்த்தங்களில் கங்கையும் எண்ணெயில் லட்சுமியும், புத்தாடைகளில் திருமாலும், குங்குமத்தில், கௌரியும், சிகைக்காயில் கலைவாணியும் எழுந்தருளுவதாக ஐதிகம். அதனாலேயே அன்றைய தினம் நீராடுவது மிகச் சிறப்பானதாகச் சொல்லப்படுகிறது.
தீபாவளி திருநாளன்று தான் நமக்கு பிக்ஷை இடும் காசி அன்னபூரணி தேவி, லட்டுகளால் செய்யப்பட்ட தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் புரிகிறாள். அவளை சரணடைவோம்! அளவற்ற இன்பம் பெறுவோம்!
பொருள் :
அன்னம் நிறைந்தவளே, என்றும் பூரணமாக இருப்பவளே, சங்கரனின் பிராண நாயகியே, அன்னை பார்வதியே, எமக்கு ஞான வைராக்யம் ஏற்பட பிக்ஷை இட்டு அருள்வாய்.
காசி அன்னபூரணி தேவி,
தீபாவளி விசேஷம்!
"அன்னபூர்ணே ஸதாபூர்ணே
சங்கர பிராண வல்லபே
ஞான வைராக்ய ஸித்யர்தம்
பிக்ஷாம் தேஹீ ச பார்வதீ"
அன்னம் நிறைந்தவளே, என்றும் பூரணமாக இருப்பவளே, சங்கரனின் பிராண நாயகியே, அன்னை பார்வதியே, எமக்கு ஞான வைராக்யம் ஏற்பட பிக்ஷை இட்டு அருள்வாய்.