ஒரு ராஜா சிவபக்தனாக திகழ்ந்தான். அவன் ராஜ்யத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஒரு சிவன் கோவில் இருந்தது. அந்த கோவில் பூஜாரி சிவலிங்கத்திற்கு மிகுந்த பக்தி உணர்வுடன் பூஜை செய்து வந்தார். அவரது பக்தி உணர்ச்சியையும் நம்பிக்கையையும் கண்டு இறைவன் அவருக்கு அவ்வப்பொழுது தரிசனம் கொடுப்பது வழக்கம்.
அந்த கோவிலுக்கு சிவபக்தனான ராஜா தினமும் வந்து இறைவனை தரிசிப்பது மட்டும் அல்லாமல் தங்கத் தாம்பாளத்தில் இறைவன் பூஜைக்காக மலர்கள், நைவேத்தியங்கள் முதலியவற்றையும் அனுப்புவது வழக்கம்.பூஜாரிக்கு சிவன் தரிசனம் கொடுப்பதை அறிந்த அரசன் "நான் கோவிலுக்கு நன்கொடை கொடுத்து இன்னும் வேண்டுவன எல்லாவற்றையும் செய்கிறேன். இருந்தும் சிவபெருமான் எனக்கு தரிசனம் தரவில்லை. இந்த பூஜாரிக்கு தருகிறாரே. அப்படி என்ன இந்த பூஜாரி செய்கிறார்?" என எண்ணினான்.
ஒரு நாள், பூஜாரி பூஜை செய்யும் வேளையில் ராஜாவும் கோவிலுக்கு வந்தான். அச்சமயம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு சுவரும் கூரையும் ஆடியது. உடனே ராஜா உயிருக்கு பயந்து வெளியே ஓடினான். பூஜாரியோ மேற்கூரை எங்கே சிவலிங்கத்தின் மீது விழுந்து விடுமோ என அஞ்சி அதன் மேல் கவிழ்ந்து மறைத்தார்.
இந்நிகழ்ச்சியின் மூலம் அரசன், தனக்கு தரிசனம் தராத இறைவன் ஏன் பூஜாரிக்கு தரிசனம் தந்தார் என்ற உண்மையை அதாவது ஆன்மீக உணர்வின் மஹிமையை புரிந்து கொண்டான்.
குழந்தைகளே! இறைவன் எப்போதும் உண்மையான பக்திக்கு அடிபணிவார் என்பதை இக்கதையின் மூலம் உணர்கிறோம் அல்லவா...