மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்கள் மற்றும் தெரிந்தே செய்த பாவங்கள் அவை நம்மை விட்டு நீங்கிப்போகும் என்பது ஐதீகம். அத்தகைய சிறப்பு வாய்ந்த மகா சிவராத்திரியின் வரலாற்றை இந்த பதிவில் காண்போம்.
பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தார். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுதும் கண்விழித்து ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தார்.
பூஜையின் முடிவில் அம்பிகை, ஈஸ்வரனை வணங்கி நான் தங்களை பூஜித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் உங்கள் திருநாமத்தின் பெயராலேயே அதாவது "சிவராத்திரி" என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினார்.
"அந்த சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவனைப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து, முடிவில் மோக்ஷத்தையும் அருள வேண்டும்", என்று உமாதேவி வேண்டிக்கொண்டார்.
சிவபெருமானும், "அப்படியே ஆகட்டும்" என்று கூறி அருள் புரிந்தார். அன்றைய தினம் இரவு முழுவதும் கண் விழித்து சிவநாமங்களை சொல்லும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்கள் கிடைக்கிறது என்பது ஐதீகம்.