வழிபாடுகளே நம் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். வழிபாடுகளிலும் கூட நிலவு நிறைந்த நாளிலும், நிலவு மறைந்த நாளிலும் மேற்கொள்ளும் விரதங்கள் உடனடி பலன்களை வழங்கக்கூடியவை.

ஸ்ரீ சித்ரகுப்த பூஜை 

சித்ரா பவுர்ணமியில் சித்ரகுப்தனை வழிபட வேண்டும். இந்த வழிபாட்டால் ஆயுள் விருத்தியும், ஆதாயம் தரும் செல்வ விருத்தியும் உண்டாகும். நமது பாவ புண்ணியங்களைப் பதிவு செய்து வைக்கும், சித்ரகுப்தனுக்கு அவர் அவதரித்த நாளில் விழா எடுப்பது சிறப்புக்குரியதாகும். ‘நாம் மலையளவு செய்த பாவத்தைக் கடுகளவு ஆக்குக, கடுகு அளவாகச் செய்த புண்ணியத்தை மலையளவு ஆக்குக’ என்று வணங்க வேண்டும்.

மஹிமை 

சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்திரத்தில் உதித்தவர் சித்ரகுப்தர். சிவனும், உமையும் "சித்திரத்து புத்திரனே வா" என்றழைக்க சித்திரத்திலிருந்து இவர் வெளிப்பட்டார் என்று புராணம் கூறுகிறது. 

இந்திராணி வளர்த்த பசுவின் வயிற்றில் ஏடும் எழுத்தாணியும் கை பிடித்து இவர் அவதரித்ததாகவும் ஓர் சரித்திரம் உண்டு. 

மேலும் சித்ரகுப்தன் பிறந்தவுடன் பசுமாடு இறந்து போனதால் சித்ரா பௌர்ணமி நோன்பு நோற்பவர்கள் பசுவின் பாலும், அந்த பாலிலிருந்து பெறப்படும் உணவு வகைகளையும் சேர்க்கக் கூடாது என்பது ஐதீகம். 

slokas4kids.blogspot.com - Chitragupta kolam

அதோடு அன்று உப்பில்லாத உணவுகளையே(பழங்கள்) உண்ண  வேண்டும். அரிசி மாவால் சித்திரகுப்தன் படத்தை கையில் ஏடும், எழுத்தாணியும், விரல்களில் மோதிரமும், காதில் குண்டலங்களும் வரைய வேண்டும். குப்தன் என்றால் கணக்கன் என்று பொருள்.

slokas4kids.blogspot.com - Chitraguptan

ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி அன்றும் இந்திரன் காஞ்சிபுரம் வந்து சித்ரபுத்திரனை வணங்குவதாக வரலாறு. சித்ராபுத்ரனின் மனைவி காணாம்பிணிதேவி. காஞ்சியில் காலையில் மஹா அபிஷேகமும், மாலையில் திருக்கல்யாணமும் நடை பெறுகிறது. 

அருப்புக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் கோவிலிலும் தனிச் சன்னிதி இருக்கிறது. இந்த ஆலயங்களுக்குச் சென்றும் சித்ர குப்தனை வழிபட்டு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம்.

slokas4kids.blogspot.com - Chitraguptan Temple

கதை 

ஒரு சிறுவனுக்கு படிப்பு வரவில்லை. முரட்டு தனமும் கோபமும் அதிகமாக இருந்தது. இதனால் அவனது தாய் வருத்தப்பட்டாள் . பின்னர் மகனிடம், "மகனே! ஸ்ரீ சித்ரகுப்தாய நம: என்று தினமும் சொல்லிக்கொண்டே வா. சித்ரகுப்தன் உனக்கு நல்ல வழி காண்பிப்பார்" என்றாள். அவனும் தினமும் அதே போல் சொல்லி வந்தான். சிறுவன் பெரியவனான். அவனிடம் கெட்ட பழக்கங்கள் வளர்ந்தன. ஆனால் "ஸ்ரீ சித்ரகுப்தாய நம:" என்று சொல்வதை நிறுத்தவில்லை. 

அவனது 52வது வயதில் ஒருநாள் சித்ரகுப்தன் மகிழ்ந்து போய் அவனது ஏட்டை புரட்டினார். அதை பார்த்தவுடன் திடுக்கிட்டார். தனது பெயரை கூறியதை தவிர அவன் வேறு நல்ல செயல் எதுவும் செய்யவில்லை. அவனுக்கு ஒரு வாரத்தில் மரணம் என்றிருந்தது. 

எனவே அவன் மீது இரக்கம் கொண்டு அவன் கனவில் தோன்றி, "மகனே! நீ இதுவரை என் பெயரை உச்சரித்தது  அன்றி வேறு நல்ல செயல் எதுவும் செய்யவில்லை. உன் நிலத்தில் ஒரு குளத்தை வெட்டு, அதில் ஒரு மாடாவது நீர் அருந்தினால் மூணே முக்கால் நாழிகை ஸ்வர்க்க வாசம் உண்டு. ஏனென்றால், பசுவின் உடம்பில் முப்பத்து முக்கோடி தேவதைகளும் வாஸம் செய்கின்றனர். நிறைய மாடுகள் நீர் குடித்தால் உனக்கு சொர்க்கவாஸம் கிடைக்கும். இல்லையென்றால் நரகவாஸம் நிரந்தரமாக கிடைக்கும்". என்றதுடன், எமன் உன்னிடம், "முதலில் சொர்க்க வாஸம் அனுபவிக்கிறாயா? நரக வாஸம் அனுபவிக்கிறாயா ?"  என்று கேட்பார்.

"முதலில் சொர்க்கவாசம் என்று சொல்லிவிடு" என்றார். 

அவனும் சித்திரகுப்தன் கனவில் கூறியபடியே ஒரு குளம் வெட்டினான். அவன் செய்த பாவத்தால் அதில் நீரே வரவில்லை. இப்படியாக ஆறு நாட்கள் முடிந்து விட்டன. ஏழாவது நாள் ஓர் ஓரத்தில் மெல்லிய ஊற்று சுரந்தது. முரடன் மகிழ்ந்தான். சித்ரகுப்தன் மாடாக வந்தார். கரையில் நின்று "ம்மா" என்று குரல் கொடுத்தார். மாடுகள் பல ஓடி வந்தன. ஒரு மாடு நீர் குடித்தது. 

அதே சமயம் நெஞ்சு வலி என்று சாய்ந்த முரடனின் உயிர் பிரிந்தது. யமன் அவன் கணக்கை கூறும்படி சொன்னார். சித்ரகுப்தனும் "இவன் பெரும் துர் ஆத்மா. சாகும் முன் ஒரு குளம் வெட்டி ஒரே ஒரு புண்ணியத்தை மட்டும் செய்திருக்கிறான். அதில் ஒரேயொரு மாடு தண்ணீர் குடித்திருக்கிறது" என்றார்.

யமன் முரடனிடம், "உனக்கு மூணே முக்கால் நாழிகை ஸ்வர்க்க வாஸம் உண்டு. முதலில் ஸ்வர்க்க வாஸம் அனுபவிக்கிறாயா? நரக வாஸமா ?" என்று கேட்டார். 

"முதலில் ஸ்வர்க்க வாஸம் அனுபவிக்கிறேன்" என்றான் முரடன். அங்கே குளத்தில் தண்ணீர் ஊற ஊற மாடுகள் வந்து தண்ணீர் குடித்தன. அவனது புண்ணிய கணக்கும் ஏறிக்கொண்டே இருந்தது. ஸ்வர்கத்திலேயே சுகமாக இருக்கலானான். ஒரு பாவி, சித்ரகுப்தனது பெயரை ஜெபித்ததால் மட்டுமே சொர்க்க போகம் அனுபவித்தான் என்றால் சித்திரகுப்தரை வழிபடும் மஹிமையை நாம் அறிந்து கொள்ளலாம்.  

அமராவதி என்ற தேவலோகப்பெண் எல்லா பூஜைகளும் முடித்தும் சித்ரகுப்த பூஜை முடிக்காததால் பூமிக்கு திருப்பி அனுப்பப்பட்டாள் என்று வரலாறு கூறுகிறது.

1 Comments

Unknown said…
Good nice to read story and get blessings from lord chitragupthan.
Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe