04/05/2020 - மதுரை மீனாக்ஷி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சிவாலயமாகும்.
இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கின்றனர். இத்தலத்தில் முதல் பூசை அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது.
2500 வருடங்கள் பழமையான மதுரை நகரானது தமிழ் இலக்கிய வரலாற்றிலும், இந்து சமய வரலாற்றிலும் முக்கியத்துவமானது. மதுரை நகரானது திருவாலவாய் ,சிவராஜ தானி, பூலோக கயிலாயம், கடம்ப வனம், நான்மாடக் கூடல், சிவ நகரம், துவாதசாந்தத் தலம், சமட்டி வித்தியாபுரம், கன்னியாபுரம் ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது.
மதுரை - பெயர்க்காரணம்
திருபாற்கடலை கடைந்த போது நாகம் உமிழ்ந்த விஷத்தை இறைவன் அமுததாக மாற்றி மதுரமாக்கினமையால் இத்தலம் மதுரை என்று பெயர் பெற்றதென்பர்.
நான்மாடக்கூடல்
மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு என்கிறார்கள் சிலர்.
ஆலவாய்
சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது.
தமிழ் நாட்டையே திரும்பி பார்க்க வைக்கும் மதுரை சித்திரை திருவிழா. சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், திருத்தேர் பவணி புகழ்பெற்றவை.
பொற்றாமரைக் குளம்
நந்தி மற்றும் பிற தேவர்களின் வேண்டுகோளின்படி, ஈசன் தன் சூலாயுதத்தால் பூமியில் ஊன்றி உருவாக்கியது இந்த குளம். மேலும் இந்திரன் தான் பூஜிப்பதற்காகப் பொன்னால் ஆன தாமரையைப் பெற்ற தலம். இந்த குளத்திற்கு சிவகங்கை என்றும் பெயர்.
இந்த குளத்தில் அமாவாசை, கிரகண காலம், மாதப் பிறப்பு உள்ளிட்ட புண்ணிய நாட்களில் நீராடி சுவாமியை தரிசித்தல் வேண்டும்.
ஈசனை மனமுருகிப் பாடிய தேவாரப்பாடலால் பாடப்பெற்ற 274 சிவாலயங்களில் இது 192வது தேவாரத்தலம் ஆகும்.
அதே போல் 51 சக்தி பீடங்களில் இது ராஜமாதங்கி சியாமளா சக்தி பீடம் என குறிப்பிடப்படுகின்றது.
மீனாக்ஷி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
மதுரையை ஆண்டுவந்த மலையத்துவஜன் என்ற பாண்டிய மன்னனும், அவரது மனைவி காஞ்சனமாலையும் குழந்தை பாக்கியத்துக்காக பார்வதி, பரமசிவனை வேண்டி யாகம் நடத்துகின்றனர்..!
மனம் இரங்கிய பார்வதி தேவி தானே 3 வயதுப் பெண் குழந்தையாக நெருப்பில் இருந்து வந்து காஞ்சனமாலையின் மடியில் வந்து விழுகிறாள்..!
குழந்தையைப் பார்த்து மகிழ்ந்து போன அரசனும், அரசியும் அந்தக் குழந்தை மூன்று ஸ்தனங்களுடன் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்..!
அப்போது வானில் தோன்றிய அசரீரி இவளை ஒரு ஆண்பிள்ளை போல வளர்த்து பட்டத்து ராணியாக முடி சூட்டுங்கள். மணப் பருவம் வந்த உடன் அவளது மூன்றாவது ஸ்தனம் மறைந்துவிடும் என்கிறது..!
மீனாட்சி ஆணுக்கு நிகரான அனைத்து வகை போர்க்கலைகளையும் கற்றுத் தேர்ந்தார்.
மதுரையின் அரசியாக, மங்கையர்க்கரசி மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
மூன்று தனங்களுடன் பிறந்த மீனாட்சி, எந்த மன்னனைப் பார்க்கும் போது ஒரு தனம் மறைகிறதோ, அவரையே திருமணம் செய்து கொள்வார் என்று மலையத்துவஜ மன்னன் கூறுகிறான்.
பட்டாபிஷேகதிற்குப் பிறகு மதுரையிலிருந்து படையுடன் கிளம்பி, ஒவ்வொரு திக்கிற்கும் சென்று போர் தொடுக்கிறார் மீனாட்சி. பூமியில் உள்ள ஒவ்வொரு மன்னனையும் வெற்றி கொள்கிறார்.
அவ்வாறு அவர் கிழக்கு திசையில் சென்றபோது, அமராவதி நாட்டின் மன்னனான இந்திரன் மீனாட்சியுடன் போர்செய்கிறான். ஆனால் மீனாட்சியின் வீர பராக்கிரமத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பணிகிறான்.
இப்படி ஒவ்வொரு திசையிலும் போர் தொடுத்து அனைவரையும் தன் காலில் விழச் செய்கிறார் மீனாட்சி.
இதேபோல, கயிலாயத்தின் மீது படையெடுத்து செல்கிறார் மீனாட்சி. அங்கு குடியிருக்கும் சிவபெருமான் மீனாட்சியை யார் என்று அறிந்தவர் ஆதலால்,
உற்சாகத்துடன் அன்னையை எதிர்கொள்ளச் செல்கிறார். படையுடன் வீரம் கொப்பளிக்க நின்று கொண்டிருக்கிறார் மீனாட்சி.
எதிர்ப்புறத்தில் சிவபெருமான் வந்து கொண்டிருக்கிறார். சிவபெருமான் நெருங்கி வர வர அன்னையின் உள்ளத்தில்வெற்றி வேட்கை குறைந்து வெட்கம் முடி சூடுகிறது..!
சிவபெருமான் அருகில் வர வர தனது கையில் இருந்த வாளை கீழே போட்டு விட்டு தலை குனிகிறார். அப்போது மீனாட்சியின் மூன்றாவது தனம் மறைகிறது. தனது மனாளனைக் கண்ட பூரிப்பில் ஆழ்ந்து நிற்கிறார்அன்னை..!
அப்போது சிவபெருமான், "அங்கயற்கண்ணியே, நீ என்று மதுரையம்பதியை விட்டு படையுடன் கிளம்பினாயோ, அன்றே நானும் உன்னைப் பின்தொடர ஆரம்பத்து விட்டேன்..! இன்றுதான் உன்னை நேரில் காண்கிறேன். இனிமேல் நீயே என் துணைவி" என்று கூறவே அன்னையின் முகம் வெட்கத்தால் சூரியனைப் போல சிவந்தது.
அன்றே அன்னையின் கரம் பிடித்தார் எம்பெருமான்..!
மரகத மீனாட்சி
இங்கு மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகத கல்லால் ஆனது. மதுரைக்கு வந்து மீனாட்சி சொக்கநாதரை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்றும், இந்த தலத்தினை பூலோக கைலாசம் எனவும் அழைக்கப்படுகின்றது.
அதனால் இந்த தலத்தில் தரித்தாலோ, பெயரைப் படித்தாலோ, கேட்டாலோ முக்தி கிடைக்கும் என நம்பப்படுகின்றது.
வழிபாடு
மீனாட்சி அம்மன் தாயுள்ளம் கொண்டவள். இங்கு யார் எதை வணங்கினாலும், அவர்களுக்கு அதை அருளுவதோடு, சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கக் கூடியவர்.
திருமணம், குழந்தை பக்கியம் வேண்டுபவர்களுக்கு வேண்டியவற்றை அளிப்பவர். மதுரை மற்றும் சுற்றியுள்ள மக்கள் எந்த ஒரு நல்ல விசேஷமாக இருந்தாலும், மதுரை மீனாட்சியை தரிசித்துவிட்டு அல்லது, சுப காரியம் முடிந்ததும் தரிசிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த கோயிலுக்கு வந்து மீனாட்சி அம்மன், சொக்கநாதரை தரிசித்தால் மன நிம்மதி ஏற்படும். சுவாமி பிரகாரத்தில் ஓம் எனும் நாதம் மட்டுமே நம் காதுகளுக்கு கேடும் அளவிற்கு மிக அமைதியாக இருக்கும்.
மன அமைதி, நிம்மதி வேண்டுவோர், கோயில் பிரகாரத்தில் அமைதியான இடத்தில் தியானம் செய்வது மிகவும் சிறந்தது.
அமைதியான வாழ்வு பெற
அன்னையின் மலரடி பணிவோம்!
அன்னையின் மலரடி பணிவோம்!