இன்று 21/05/2021 மகான்
நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராளின் ஆராதனை
மறைந்தும் மறையாமல் சூட்சும வடிவில் அருள் செய்பவர்கள்தான் மகான்கள் என்று போற்றப்படுகிறார்கள். அவர்களில் 'நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரர்' என்றும் நமக்கு அருள் செய்யும் அதிசயிக்கத்தக்க பிரம்மஞானி.
அதிஷ்டானம் / ஜீவ சமாதி
மனிதர்கள் இறந்தால், அக்னிக்கு இரை ஆக்குகிறார்கள். உடல் அழிகிறது. ஆன்மா விலகுகிறது. ஆனால், மகான்கள் இறைவனடி எய்தும்போது, அவர்களின் பூத உடலை அப்படியே பூமிக்குள் வைத்துப் புதைத்து, சமாதி எழுப்புகிறார்கள். இதை அதிஷ்டானம் என்றும் ஜீவ சமாதி என்றும் அழைக்கிறார்கள்.
ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரர் வாழும்போதே பிரம்மத்தை உணர்ந்து அருள் செய்தவர். அத்வைத ஞானி. அற்புதமான கர்நாடக இசைப்பாடலைகளை எழுதியவர். இன்றும் இவரது ஜீவசமாதியை தரிசிப்பவர்கள், இவரை கடவுள் நிலைக்கே உயர்த்தி வணங்கி வருகிறார்கள்.
சதாசிவரின் வாழ்க்கை வரலாறு
சுமார் முந்நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் சிவராமகிருஷ்ணன் என்ற திருநாமத்தோடு சோமசுந்தர அவதானியாருக்கும் பார்வதி அம்மையாருக்கும் பிறந்தார்.
சிறுவயது முதலே ஞானக்குழந்தையாக வளர்ந்த அவர் திருவிசலூர் மஹா வித்வானிடம் கல்வி கற்றார். பின்னர் காஞ்சி மடத்தின் ஐம்பத்தியேழாவது பீடாதிபதியான ஸ்ரீ ஸ்ரீ பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் சகல வேத சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார்.
கல்வி, கேள்வி, சாஸ்திரம், வேதம், சங்கீதம் போன்றவற்றை முறையாக கற்றார். திருவிசைநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள், கோவிந்தபுரம் போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், அப்பைய தீக்ஷிதர், சிவயோகி தாயுமானஸ்வாமி ஆகியோரெல்லாம் இவரது சமகாலத்தவர்கள் என்று கூறப்படுகிறது.
'குருவே சரண்' என்று வாழ்ந்த சிவராமனுக்கு சரஸ்வதி கடாட்சம் முழுமையாகக் கிடைத்தது. இதனால், எல்லா வித்வான்களையும் வென்று குருவுக்கு பெருமை சேர்த்தார்.
திருமணம் சம்பந்தமான ஒரு கொண்டாட்டம் சதாசிவரின் இல்லத்தில் நடந்து கொண்டிருந்தது. அப்போது அவருக்கு பசி எடுத்தது. தனது தாயை அணுகி உணவு அளிக்குமாறு கேட்டார். "சற்று பொறு! உன் திருமணத்துக்கான கொண்டாட்டங்கள் தான் நடந்து வருகிறது. நீ இப்போது அவசரப்படலாமா?" என்று அவரது தாயார் கேட்ட பொது, துணுக்குற்றார் சதாசிவர்.
திருமணத்துக்கு முன்னரே பசித்தபோது சோறு போட முடியவில்லை என்றால், மணமான பின் இல்லற வாழ்வில் எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்று சிந்தித்தவர் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு புறப்பட்டு விட்டார். நடந்தார் ... நடந்தார் ...
மௌன வாழ்க்கை
கடுமையான விவாதத்தில் இருந்த சிவராமனை அடக்க எண்ணிய குரு, 'ஊரார் வாயை அடைக்க விவாதிக்கும் நீ, உன் வாயை அடக்கக் கற்று கொள்ளவில்லையே' என்றார். அன்றோடு பேசுவதை நிறுத்திக்கொண்டார். மௌனவிரதம் இருக்கும் ஒருவருக்கு மனம் ஒன்றிவிடுமல்லவா?
மௌனமே நிரந்தரமான பரிவர்த்தனை ஆனது. அவசரமான சந்தர்ப்பங்களில் மட்டும் மணலில் எழுதிக் காண்பித்துக் குறிப்பு சொல்வார். தேசத்தின் பல இடங்களுக்கும் இவர் சென்று வந்துள்ளார். துருக்கி நாட்டுக்கு கூட இவர் சென்று வந்ததாக செவி வழிச்செய்தி உண்டு.
சிவராமன் கடவுளோடு ஐக்கியமானார். அவரது சிந்தனை, சொல், செயல் யாவும் பிரம்மத்தை நோக்கியத் தேடலாக மாறியது. இவரது நிலை கண்டு சிலிர்த்த, காஞ்சி மஹாகுரு இவரை 'பிரமேந்திரர்' என்று அழைத்தார்.
ஊன், உறக்கம் யாவும் மறந்த பிரமேந்திரர், சதா காலமும் சிவசிந்தனையே கொண்டிருந்தார். ஆடைகளைத் துறந்து திகம்பரர் ஆனார். இயற்கையோடு இணைந்து மனிதர்களை விட்டு விலகி வாழ்ந்தார்.
வாயைக்கட்டு
ஒருநாளைக்கு ஒருவேளை, அதுவும் மூன்று கவளம் மட்டுமே பிட்சை வாங்கி உண்டார். ஒரு சம்பவத்தால் அதுவும் நின்று போனது.
ஒருமுறை பெண்ணின் வற்புறுத்தலுக்காக நாலாவது கவளம் வாங்கி உண்ண, அவளது கணவன் இவரை பார்த்து 'இன்னும் உனக்கு மனதை கட்டுப்படுத்தத் தெரியவில்லையே, நீ எப்படி பிரம்மத்தை அறிவாய்?' என்று கிண்டல் செய்தார். அத்தோடு உண்பதையும் நிறுத்தினார். எண்ணற்ற சித்து விளையாட்டுக்களால் பலரை காப்பாற்றினார்.
சலனமற்ற வாழ்க்கை
ஒருமுறை இவர் திகம்பரமாக சாலையில் நடந்து சென்ற போது ஒரு சிற்றரசனின் அந்தப்புரத்தைக் கடக்க நேர்ந்தது. ஆடை இல்லாதவர் அந்தப்புரத்தில் வழியே நடந்து செல்கிறார் என்று அறிந்த அரசன் கடுங் கோபமுற்றார். தன் வாளால் சாலையில் சென்று கொண்டிருந்த சதாசிவரை சரேலென வெட்டினான். அந்த மகானின் கை வெட்டப்பட்டு தனித் துண்டாக நிலத்தில் விழுந்தது. ரத்தம் ஆறாக வழிந்து கொண்டிருந்ததை சற்றும் உணராத சதாசிவர், எதுவுமே நடக்காதது போல், சென்று கொண்டிருந்தார்.
இதைக்கண்ட மன்னன் குழம்பிப் போய் பயம் மேலிட, அவர் பின் தொடர்ந்தார். மகானின் நிலை தொடர்ந்து அவனை பீதிக்குள்ளாக்க, ஓடிப்போய் அவர் பாதம் பணிந்து மன்னிப்பு கேட்டான். அப்போதும் சதாசிவர் எதுவும் நிகழாதது போல் வெட்டுப்பட்ட இடத்தை மெல்ல தடவிக் கொடுத்தார். ரத்தம் வழிவது சட்டென நின்று போய் அவரது திருக்கரம் தானாகவே வந்து ஒட்டிக் கொண்டது!
இதைக்கண்ட சிற்றரசன் அவரது அருளுக்கும், ஆசிக்கும் பாத்திரமாகி விட்டான். இதுபோல் எண்ணற்ற அதிசயங்கள் சதாசிவரின் வாழ்வில் நடந்துள்ளன.
காவேரி தியானம்
தனது வாழ்க்கையின் பெரும்பாலான பொழுதுகளை காவிரிக்கரையிலேயே கழித்தவர் சதாசிவர். அதனால் தானோ என்னவோ, எங்கெங்கோ சுற்றி இருந்தாலும், இறுதி காலத்தில் கரூருக்கு அருகில் உள்ள நெரூருக்கு வந்து, தான் சமாதி ஆகப்போகும் இடத்தை அவரே தேர்ந்தெடுத்தார். அடிக்கடி சமாதி நிலையில் இருக்கும் சுபாவம் கொண்டவர் சதாசிவர்.ஒருமுறை, கொடுமுடிக்கு அருகில் ஆற்றங்கரையில் சமாதி நிலையில் அமர்ந்தார் சதாசிவர். ஓரிரு நாட்கள் கழித்து காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட சதாசிவரையும் வெள்ளம் மூழ்கடித்து விட்டது.
கரையில் இருந்த மக்கள் இதைக்கண்டு பதறினர். "கரையில் இருந்த சாமியைக் காணோம்!" என்று ஒருவர் அலற, அடுத்தவர் சோகத்துடன் "ஆத்து வெள்ளம் பாய்ஞ்ச வேகத்தில் அது அவரையும் அடிச்சிட்டுப் போயிருக்கும். வெள்ளத்துக்கு நல்லவங்க, கெட்டவங்க வித்தியாசம் தெரியவா போகுது. பாவம்! அவரு இப்படி அல்ப ஆயுசுல போய்ட்டாரு" என்று அங்கலாய்த்தனர்.
இதன் பிறகு கொடுமுடி மக்கள் சதாசிவரை பற்றி மறந்து போய் விட்டார்கள். ஒரு கோடை காலத்தில், தண்ணீர் வற்றிய நேரத்தில், வாய்க்கால் வெட்டுவதற்காக பணியாளர்கள் ஒரு மணல் மேட்டை ஒரு மண்வெட்டி மூலம் வெட்ட ஆரம்பித்தார்கள்.
அப்போது ஒரு பணியாளுக்கு, அவரது மண் வெட்டியின் முனையில் இரத்தம் இருந்ததைக் கண்டு மிரண்டு போயினர். "உள்ளே விசித்திரமான ஏதோ ஒன்றின் மேல் மண்வெட்டி பட்டதாகத் தெரிகிறது" என்று அலறி மண்ணை மெதுவாக விளக்கினார்கள். உள்ளே-பள்ளத்தில் உடலெங்கும் மண் அப்பிய கோலத்தில் சமாதி நிலையில் காட்சி அளித்தார் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர். காற்று புக முடியாத அந்த மண் மூடிய இடத்தில் எத்தனை காலமாக சமாதி நிலையில் இருந்தார் என்பது இறைவனுக்குத் தான் தெரியும்.
தன் சமாதி நிலை களைந்ததால், பள்ளத்தில் இருந்து எழுந்தார் சதாசிவர். உடலில் மண்வெட்டி பட்ட இடத்திலிருந்து ரத்தம் கசிவதை பொருட்படுத்தாமல் விறுவிறுவென்று நடந்து சென்றார். பணியாட்கள் இதைக் கண்டு திகைத்துப் போயினர்.
புன்னை நல்லூர் மாரியம்மன்
புற்று மண்ணெடுத்து இவர் உருவாக்கிய அம்பிகையே இன்றும் புன்னை நல்லூர் மாரியாக அருள்செய்து வருகிறாள். தஞ்சை, தேவதானப்பட்டி, கரூர், திருநாகேஸ்வரம் பகுதிகளில் இவரால் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டன.
மகானின் கரம் பட்ட மந்திர மண்
சமஸ்தானமாக இருந்த போது புதுக்கோட்டையின் மன்னராக விளங்கிய விஜயரகுநாத தொண்டைமான் சதாசிவ பிரம்மேந்திரரின் அருளுக்கு பாத்திரமானவர் .
1738-ல் புதுக்கோட்டைக்கு அருகில் காட்டு வழியே செல்லும்போது அப்பகுதியின் மன்னரான விஜய ரகுநாத தொண்டைமான் இவரைக் கண்டார். உடனே மகானின் மனதும் இளகியது. குருவிடம் உபதேசம் கேட்கும் சீடன் போல் சதாசிவர் முன் பணிந்தபடி நின்றார் மன்னர்.
மௌனத்தையே அவர் கடைபிடித்து வந்ததால், மன்னரை அமரச்செய்து மணலில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை உபதேசம் செய்து வைத்தார்.
அந்த மந்திரம்:
"ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்தயே
மஹ்யம் மேதாம் ப்ரக்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா:"
மந்திர உபதேசம் பெற்ற பின், அந்த மணலை பவ்யமாக தன் இரு கைகளால் அள்ளி, தலைப்பாகையில் எடுத்துக் கொண்டு அரண்மனை திரும்பினார் மன்னர். அந்த மந்திர மணலை பூஜை அறையில் வைத்து தினமும் அதை வழிபாட்டு வந்தார் மன்னர்.
இன்றும் அந்த மந்திர மணலையும், ஸ்ரீ ராம பிரானால் பூஜிக்கப்பட்ட தக்ஷிணாமூர்த்தி விக்கிரகத்தையும் நாம் புதுக்கோட்டை அரண்மனையில் வியாழக்கிழமைகளில் தரிசிக்க முடியும்.
மஹா சமாதி
தான் சமாதி ஆவதற்கு சில நாட்கள் முன்பு ஊர் பெரியவர்களையும், அந்தணர்களையும் அழைத்தார். தான் சமாதி ஆன பின் என்ன செய்ய வேண்டும் என்பதையும், காசியிலிருந்து ஒரு அந்தணர் பாண லிங்கம் ஒன்றைக் கொண்டு வருவார் என்றும், அதை தன் சமாதியில் ப்ரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் உணர்த்தினார்.
அதன்படி சித்திரை மாத தசமி நாளில் ஜீவசமாதி அடைந்தார், பத்தாம் நாள் அவ்விடத்தில் வில்வமரம் முளைத்தது. பிரம்மேந்திரரின் அருளுக்கு பாத்திரமான விஜய ரகுநாத தொண்டைமான் தகவல் கேள்விப்பட்டு நெரூர் வந்தார். முறைப்படி நடக்க வேண்டிய பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தார். அதுவே இப்போது நமக்கு ஒரு திருக்கோயிலாக காட்சி அளிக்கிறது.
இவர் மறைந்து 120 வருடங்கள் கழித்து ஒரு அதிசயம் நடந்தது. சிருங்கேரியில் பரமாச்சாரியாராக இருந்த ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகளுக்கு பிரம்ம ஞானத்தில் ஒரு சந்தேகம் உண்டானது. அதை கேட்டுக்கொள்ள அவர் நெரூர் வந்தார்.
இவர் மறைந்து 120 வருடங்கள் கழித்து ஒரு அதிசயம் நடந்தது. சிருங்கேரியில் பரமாச்சாரியாராக இருந்த ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகளுக்கு பிரம்ம ஞானத்தில் ஒரு சந்தேகம் உண்டானது. அதை கேட்டுக்கொள்ள அவர் நெரூர் வந்தார்.
மூன்று நாள் கடும் தியானத்துக்குப் பிறகு, அவரது சந்தேகங்களை ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரர் தீர்த்து அனுப்பி வைத்தார். இன்றும் எண்ணற்ற பக்தர்களின் குறைகளைத் தீர்த்து அருளாசி செய்து வருகிறார் மகான் ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரர்.
உயிர் பிரிந்து, உடல் உறங்கிக் கொண்டிருந்தாலும் இன்றைக்கும் மகான்கள் நம்மிடையே வாழ்ந்து வருகிறார்கள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இவர்களின் சந்நிதியை தேடி வந்து, அன்பர்கள் பிரார்த்திக்கும் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து, அவர்களது வாழ்வில் ஆனந்தம் நிலவ அருள் புரிகிறார்கள் மகான்கள்.
ஸ்ரீ சதாசிவரின் பாதம் பணிவோம் !
வாழ்வில் நலம் பெறுவோம் !!