ஒரு சமயம் வியாபாரி ஒருவன் மாட்டு வண்டியில் கட்டுக்கட்டாக கரும்புகளை ஏற்றிக் கொண்டு வெளியூரில் உள்ள சர்க்கரை ஆலைக்குப் புறப்பட்டான். இவ்வூர் எல்லைப் பகுதியைக் கடக்கும்போது அவனுக்கு உறக்கம் வர, வண்டியை அருகிலிருந்த குளத்தின் கரையில் நிறுத்திவிட்டுக் குளத்து நீரில் முகம் கழுவிக் கொண்டு வந்தான்.அப்போது பாலகன் ஒருவன் வண்டிக்கு அருகில் நின்று கரும்புக்கட்டுகளை உற்று நோக்கிக் கொண்டு இருந்தான்.
வியாபாரியைக் கண்டதும், 'எனக்குப் பசி வயிற்றைக் கிள்ளுகிறது ஒரு கரும்பைக் கொடேன்' என்று கேட்டான் கரும்பைக் கொடுக்க வியாபாரிக்கு மனமில்லை.
"ம்ஹூம் தரமுடியாது!" என்று மறுத்துவிட்டு பயணத்தைத் தொடர்ந்தான். வண்டி ஓட்டத்தோடு சிறுவனும் ஓடிக்கொண்டே கெஞ்சலும் கொஞ்சலுமாக மீண்டும் கரும்பை கேட்டுக் கொண்டே வந்தான்.
தெருவில் போய்க் கொண்டிருந்த சிலர், "ஏனப்பா! குழந்தை ஆசை ஆசையா கேக்குதே கட்டுலயிருந்து ஒண்ணே ஒண்ணு ஒடிச்சுக் கொடுத்தா குறைஞ்சா போயிடுவே! பிள்ளையை பார்க்கிறதுக்கு பிள்ளையாராட்டமே இருக்குது." என்றார்கள்.
அப்படியும் வியாபாரிக்கு மனம் கனியவில்லை. "இவை நாணல் குச்சி மாதிரி. இதை ஒடிச்சு உறிஞ்சினால் உப்பு கரிக்கும். சர்க்கரை ஆலைக்குக் கொண்டு சென்று இயந்திரத்தில் பிழிந்தால்தான் இனிக்கும்" என்று பாலகனுக்காக சிபாரிசு செய்தவர்களிடம் பொய் சொன்னான்.
ஏமாற்றமடைந்த சிறுவன், "நல்ல சாறு தரும் கரும்புகளை வண்டி முழுவதும் வைத்துக் கொண்டு நாணல் குச்சிகள் என்றா பொய் சொல்கிறார் அவை உனக்குப் பயன்படாததாகவே ஆகட்டும்" என்று கூறிவிட்டு அருகிலுள்ள ஆலயத்துக்குள் நுழைந்துவிட்டான்.
வண்டிக்காரன் சர்க்கரை ஆலையை அடைந்ததும், அங்குள்ள ஆள் வண்டியில் ஏறி கரும்புக்கட்டுகளை சோதித்துப் பார்த்துவிட்டு கோபம் அடைந்து, "ஏனப்பா! இந்த மாதிரி ஏமாத்து வேலை எத்தனை நாளா செஞ்சுகிட்டு வர்றே. வெறும் நாணல் குச்சிகளைக் கட்டி வந்து கரும்பு என்று பொய் சொல்றியா! உனக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா?" என்று ஏளனமாகக் கேட்டான்.
அதிர்ச்சியடைந்த வியாபாரி வண்டியில் ஏறிப்பார்க்க, எல்லாமே நாணல் குச்சிகளாக இருந்தது. எப்படி நாணல் குச்சிகளாக கரும்பு மாறியது ?என்றெண்ணியவாறே தன் வீட்டுக்கு திரும்பி வந்து படுத்துறங்கிவிட்டான்
வழியில் தன்னிடம் கரும்பு கேட்ட பாலகன் அவன் கனவில் தோன்றி , "நான்தான் பிள்ளையார்! நல்ல கரும்புகளை வெறும் நாணல் குச்சிகள் என்று என்னிடமே பொய் சொன்னாய். இப்போது நீ சொன்ன மாதிரி அவை நாணல் குச்சிகளாக மாறி உனக்குப் பயன்படாமல் போய்விட்டது. வியாபாரியான உனக்கு கொஞ்சம்கூட தர்ம சிந்தனை இல்லையே" என்று கூறினார்.
இதன் பி்ன்னரே பாலகனாக வந்து பிள்ளையாரே தன்னிடம் விளையாடியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டான்.
"சுவாமி! என்னை சோதித்தது தாங்கள்தானா என் தவறை மன்னித்தருளுங்கள். இனிமேல் தர்மசிந்தனையுடன் வாழ்வேன்" என்றார் வியாபாரி.
கோபம் தணிந்த விநாயகர், நாணல் குச்சிகளை மீண்டும் கரும்புகளாக மாற்றினார். சிறுவனாக வந்த விநாயகர் சென்று மறைந்த கோயிலில் எழுந்தருளியுள்ள விநாயகர். அன்று முதல் கரும்பாயிரம் பிள்ளையார் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.
பழமையான ஆலயம். ஆகமப்படி தினசரி வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. விநாயகருக்குரிய பண்டிகை நாட்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
கும்பகோணம் தல வரலாறுக்குக் காரணமாகவும் பிரதான சிவாலயமாகவும் விளங்கும் கும்பேஸ்வரர் கோயிலுக்கு அருகில் இந்த கோயில் அமைந்துள்ளது. குடந்தை நகரத்தின் மூத்த பிள்ளையாரான இவர் ஆதியில் வராஹ பிள்ளையார் என்ற திருநாமத்துடன் அழைக்கப்பட்டார்.
ஒரு சமயம் அசுரன் இரண்யாட்சகன் பூமிதேவியை பாதாள உலகத்துக்குக் கொண்டு சென்று விட்டான். உடனே மகாவிஷ்ணு வராஹ வடிவெடுத்து விநாயகரை வேண்டிக் கொண்டே பூமிதேவியை மீட்டருளினார் அதன் காரணமாகவே இவர் வராஹ பிள்ளையார்.
கும்பகோணம் செல்பவர்கள் அவசியம் இந்தப் பிள்ளையாரையும் தரிசியுங்கள் உங்கள் வாழ்வு கரும்பு போல் இனிப்பாக மாறும் என்பது நிச்சயம்!