ஆருத்ரா தரிசனம் - 20/12/2020, திங்கள்கிழமை 


மாதங்களில் உத்தமமான மார்கழி மாதத்தில், திருவாதிரை நட்சத்திரத்தன்று வருகிறது ஆருத்ரா தரிசனம். நட்சத்திரங்களில் திருவோணம் மற்றும் திருவாதிரை இரண்டிற்கும் தான் திரு என்னும் அடைமொழி சொல்லப்பட்டிருக்கிறது. திருவாதிரையை வடமொழியில் ஆருத்ரா என்று கூறுவார்கள்.

ஆருத்ரா தரிசனத்திற்குக் காரணமான பிட்சாடனர் கதை :

பஞ்ச பூதங்களின் இயக்கத்திற்கும் ஆதாரமாக இருக்கும் ஸ்ரீ சிவபெருமானை நிந்தித்து, ஒருமுறை தாருகாவனத்தில், முனிவர்கள் ஒன்று கூடி, முக்கண்ணனுக்கு எதிராக வேள்வி ஒன்றை நிகழ்த்தினார்கள்.

அதாவது, அவர்களின் கோட்பாட்டின்படி, கர்மத்தை மட்டும் செய்தால் போதுமானது. கடவுள் என்பவர் கிடையாது என்பதுதான். அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டி, கயிலைநாதன், பிட்சாடனர் ரூபமெடுத்து, பிட்சைக் கேட்டு, முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். பிட்சாடனரைக் கண்ட முனி பத்தினிகள் அனைவரும், அவரின் பின்னால் போகத் தொடங்கினார்கள்.

இச்செயலைக் கண்ட முனிவர்கள், மிகுந்த கோபம் கொண்டு வெகுண்டு எழுந்தார்கள். வேள்வித்தீயினில், மத யானை, மான், உடுக்கை, முயலகன். தீப்பிழம்பு ஆகியவற்றைத் தருவித்து, அனைத்தையும், ஸ்ரீ சிவபெருமான் மேல் ஏவி விட்டார்கள். சர்வேசன் ஆனவர், மத யானையைக் கொன்று அதன் தோலைத் தரித்துக் கொண்டார். மான், உடுக்கை, அக்னி அனைத்தையும் தானே சுவீகரித்துக் கொண்டார்.

முயலகனின் மேல் வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கியபடி நடனம் ஆடி, முனிவர்கள் உண்மையை அறியச் செய்தார். அதுவே ஆருத்ரா தரிசனம் என்று கூறப்படுகிறது.

ஸ்ரீ நடராஜப் பெருமாள் 108 நடனங்களை ஆடி இருக்கிறார். அவர் தனியாக ஆடியது 48. ஸ்ரீ உமாதேவியுடன் சேர்ந்து ஆடியது 36. தேவர்களுக்காக ஆடியது 12. ஸ்ரீ திருமாலுடன் ஆடியது 9. முருகனுடன் ஆடியது 3.

பஞ்ச பூதங்களான ஆகாயம் என்பதற்கு சிதம்பரம் என்றும். அக்னி என்பதற்கு திருவண்ணாமலை என்றும், நீர் என்பதற்கு திருவானைக்காவல் என்றும், காற்றுக்கு காளஹஸ்தி என்றும் , நிலத்திற்கு காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் என்றும் இவைகளின் பெருமைகளைக் கூறும் வண்ணம் இந்த புண்ணியத் தலங்கள் அமைந்திருக்கின்றன. இதில் சிதம்பரம் தான் முதன்மையாகச் சொல்லப்படுகிறது.

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன? 

 🔱 தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப்படுகிறது.


  🔱 மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். 

 🔱 பிறப்பே எடுக்காத (ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு) சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி?  சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள். பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன் என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவ பெருமானைக் குறிக்கிறது.

 🔱 சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள்.

  🔱 சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன்.  ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும்.

  🔱 வியாக்ரபாத முனிவர், பதஞ்சலி முனிவரும் சிவ பெருமானின் திருநடனத்தை காண விரும்பி ஈசனை துதித்தனர். அவர்களுக்காக திருநடனத்தை நிகழ்த்திக் காட்டிய நிகழ்வு தான் ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


  🔱 ஆனந்தத் தாண்டவமாடிய கனகசபை சிதம்பரம், திருஆலங்காடு திருத்தலத்தில் ஊர்த்துவத் தாண்டவமாடிய ரத்தினசபை, மதுரையில் பாண்டியனின் வேண்டுதலுக்காக இடக்கால் மாறி ஆடிய வெள்ளிசபை திருஆலவாய், நெல்லையில் தாமிர சபை , குற்றாலத்தில் சித்திர சபை ஆகிய பஞ்ச சபைகளிலும் ஆருத்ரா அபிஷேகம், தரிசனமும் வெகு சிறப்பாக நடைபெறும்.

புராணச் செய்திகள் 

💫சேந்தனார் வீட்டுக்கு களியுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம், ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.

💫 ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகா வுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும். ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.

💫 திரேதாயுகா அலறித் துடித்து பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள்.

💫அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி, திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

💫 அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவுக்கும் அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்.

💫சேந்தனாருக்கும் திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுகிறது.


திருவாதிரைக்கு ஒரு வாய் களி

🕉️திருவாதிரை அன்று களி செய்யும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கினார்கள். 

🕉️ பட்டினத்தாரின் கணக்கு வழக்கு பார்த்தவர் சேந்தன் செட்டியார். பன்னிரண்டு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் உள்ள திருப்பல்லாண்டு திருவிசைப்பா முதலிய பதிகங்களை பாடியவர் சேந்தனார் ஆவார். பட்டினத்தார் துறவு மேற்கொண்டதால் சேந்தனார் இடம் மாறினார்.

🕉️ சேந்தனார் வருமானம் இல்லாத நிலையில் ஏழை ஒருவர் பசி என வந்தார். சேந்தனார் மனைவி காயாத விறகை பற்ற வைத்து வீட்டில் இருந்த மாவை கிளறி களி செய்து அவருக்கு படைத்தார். 


🕉️ சாப்பிட்டவர் நன்றாக  இருந்தது  என்று சொல்லி போனார். மறுநாள் தில்லை நடராஜர் சன்னதி மூலஸ்தான படிகளில் (பஞ்சாக்கர படிகளில்) சிறிது சிறிது களி சிந்தி இருந்தது.

🕉️ சேந்தனார் களி தந்ததும் நடராஜர் களி உண்டதும் மார்கழி திருவாதிரை நாளிலே. இறைவனே வந்து சேந்தனாரின் பக்திக்கு மெச்சி களி உண்டதால் தான் ஆருத்ரா தரிசனத்தன்று களி படைக்கும் பழக்கம் உருவானது. 

மார்கழி மாதத்தில் சிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது சிறப்பு வாய்ந்தது. திருவாதிரை நட்சத்திர தினத்தில் செய்யப்படும் மகா அபிஷேகத்தையும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தையும் காண பக்தர்கள் குவிவார்கள்.  ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம்.

... திருச்சிற்றம்பலம் ...

1 Comments

Hema Ramesh said…
Very nice and detailed
Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe