ஸத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் ஆராதனை 
 பகுள பஞ்சமி   ன்று கொண்டாடப்படுகிறது.

தனக்கென்று வாழாமல், இசையையே உயிர் மூச்சாக கொண்டு, கீர்த்தனைகள் பல இயற்றி, ஸ்ரீராம பக்தியிலேயே திளைத்த மகான் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள். மும்மூர்த்திகளில் (தியாகராஜர், ஸ்யாமா சாஸ்திரி, முத்துஸ்வாமி தீட்சிதர்) அவர் முதலாவதாகப் போற்றப்படுகிறார். 


பாடகர்கள் புதிது புதிதாக உருவாகலாம். ஆனால், அவர்கள் பாடும் கீர்த்தனைகள் பழையனதான்.  இன்றைய பாடகர்கள் ஆலாபனை செய்யும் ஸ்ரீ தியாகராஜரின் கீர்த்தனைகள் எல்லாம், அவர் பசியுடன் இருந்த வேளையில், பக்தி ரசம் மனதில் ததும்ப ஆத்மார்த்தமான பாவத்தில் பாடியவையே!

அவரின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது வாழ்வில் நிகழ்ந்த சில சுவையான சம்பவங்களையும்  இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தியாகராஜரின் இளமைப்பருவம்

ஸ்ரீ தியாகராஜரின் பெற்றோர் ஸ்ரீ ராமப்ரம்மம் - ஸ்ரீமதி சீதம்மா ஆவர். இவர்கள் ஆந்திர தேசத்தை சார்ந்தவர்கள். வறுமையின் காரணமாக தமிழகம் வந்து திருவாரூரில் குடியேறினர். இவர் தினமும் ஸ்ரீ ராம விக்கிரகங்களுக்கு பூஜை செய்து வந்தார். 

ஸ்ரீ தியாகராஜர்  04/05/1767, சித்திரை மாதம் 25ம் தேதி பூச நக்ஷத்திரத்தில் மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவர் பிறந்த பின் இவரின் குடும்பத்தினர் தஞ்சாவூருக்கு அண்மையில் உள்ள திருவையாறில் குடியேறினர். தியாகராஜருக்கு அவரது 8-வது  வயதில் உபநயனம் செய்து, அவருக்கு ஸ்ரீ ராமநாம உபதேசமும் செய்துவைத்தார்.


அத்துடன் தான் பூஜித்து வந்த ஸ்ரீராம விக்கிரகங்களை தன் மகனிடமே கொடுத்து அனுதினமும் பூஜைகள் செய்ய சொன்னார். ஆகையால் ஸ்ரீராமபிரானின் மேல் பக்தி கொண்டார் தியாகராஜர். இவரது குரு ஸொண்டி வெங்கட்ரமணய்யா ஆவார். குருவின் அருளாலும் வழிநடத்தலாலும் சங்கீத சம்பிரதாயங்களில் மிக சிறந்த முறையில் இவர் கற்று தேறினார். 


எளிமையே உருவானவர் தியாகராஜர்

மெலிந்த தேகம், சிவந்த நிறம், சற்றே நீண்ட கழுத்து, சுமாரான உயரம், தலையில் குடுமி, கழுத்தில் துளசி மாலை, நெற்றியில் கோபிச்சந்தனம்... என்று எளிமையே உருவானவர் அவர். அதிர்ந்து பேசத்தெரியாதவர் தியாகராஜர்.  

எவருக்கேனும் உதவ வேண்டும் என்ற மனோபாவம் கொண்டவர்.  தினமும் காலை அனுஷ்டானங்களை முடித்துவிட்டு கையில் ஒரு சொம்புடன் உஞ்சவிருத்திக்கு வெளியே கிளம்புவார். வீடுதோறும் வாசலில் நின்று ராமநாமத்தை ஜபித்து சொம்பு நிரம்பியவுடன் போதும் என்ற மனதுடன் வீடு திரும்பி விடுவார். 


உஞ்ச விருத்தியில் சேகரித்த அரிசியை அன்னமாக்கி, இறைவனுக்கு நைவேத்தியம் செய்த பின் வீட்டில் உள்ளவர்கள் உணவருந்துவார்கள். அப்போது யாரேனும் வந்தால் அவர்களுக்கும் விருந்து அளித்து மகிழ்வார்கள்.  அடுத்த வேளைக்குத் தேவைப்படுமே என்று எதையும் சேர்த்து வைக்கும் பழக்கமே தியாகராஜருக்கு இல்லை!

18 வது வயதில் தியாகராஜருக்குத் திருமணம் நடந்தேறியது. இவரது மனைவி பார்வதி அம்மாள். ஐந்து வருடங்கள் மட்டுமே தியாகராஜருடன் வாழ்ந்து இறைவனடி சேர்ந்தார். அதன் பின் பார்வதி அம்மாளின் தங்கை கமலாம்பாளை திருமணம் செய்து வைத்தனர். இவர்களின் மகள் சீதாலக்ஷ்மி.

நாரத தரிசனம் 

ஒரு நாள் காலை, துறவி ஒருவர் தியாகராஜரின் இல்லம் (திருவையாறு) தேடி வந்தார். "உங்களுடைய சங்கீதத்தைக் கேட்க வேண்டும் என்று ஆவலாக உள்ளேன்" என்றார் துறவி. உடனே சில கீர்த்தனைகளை பாடினார் தியாகராஜர். இதைக் கேட்டுத் துறவி இன்புற்றார். "உணவருந்திவிட்டுச் செல்லலாமே?" என்றார் தியாகராஜர்.

சரி, காவிரிக்குச் சென்று நீராடிவிட்டு வருகிறேன். சாப்பிடுவோம். முதலில், இதை வாங்கிக் கொள்ளுங்கள்" என்று சுவடிகள் சிலவற்றைக் கொடுத்துச் சென்றார். போனவர் திரும்பவே இல்லை. பல இடங்களிலும் தேடிப் பார்த்தார் தியாகராஜர்; துறவியைக் காணவில்லை !

 

அன்று இரவு அதே நினைவுடன் உறங்கிப் போனார். அவரது கனவில் தோன்றிய துறவி, "தியாகராஜா! உனது வீட்டுக்கு வந்து உன் கானத்தைக் கேட்டு மகிழ்ந்தது நாரதனாகிய நானே! உன்னிடம் தந்த சுவடிகளில் 'ஸ்வரார்ணவம்' மற்றும் 'நாரதீயம்' எனும் நூல்கள் இருக்கின்றன. சங்கீதம் சம்பந்தமான இலக்கணங்களைச் சொல்லும் இந்த நூல்கள் உனக்கு உதவும்” என்று அருளி மறைந்தார். இப்படி, நாரத பகவானை தரிசிக்கும் பேறு தியாகராஜருக்கு வாய்த்தது.

தியாகராஜர் - வால்மீகி அவதாரம் 

தியாகராஜரை, வால்மீகியின் அவதாரம் என்பர். வால்மீகி முனிவர், 24 ஆயிரம் ஸ்லோகங்களால் ராமரைத் துதித்துக் காவியம் எழுதினார். அதுபோல் 24 ஆயிரம் கீர்த்தனைகளால் ராமபிரானைப் போற்றிப் பாடினார் தியாகராஜர் என்று சொல்வதுண்டு. ஆனால், அவற்றுள் இன்று நம்மிடையே கிடைத்திருப்பது வெறும் 700 மட்டுமே என்கிறார்கள். இவைகூட அவரது சீடர்கள் சிலரின் முயற்சியால் சேகரிக்கப்பட்டவையாகும்!


காஞ்சிபுரம், திருப்பதி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, ஸ்ரீரங்கம், திருவொற்றியூர் உட்பட எண்ணற்ற சைவ - வைணவ க்ஷேத்திரங்களையும் அங்கெல்லாம் உள்ள இறை மூர்த்திகளையும் தரிசித்துப் பாடியுள்ளார் தியாகராஜர். ராமனைத் தவிர, வேறு பல தெய்வங்களைப் பற்றி தியாகராஜர் பாடி இருக்கிறார் என்றாலும், எண்ணிக்கையில் பார்த்தால் அவை மிகவும் குறைவுதான்.

தனது வாழ்நாளில் மொத்தம் 96 கோடி ராம நாமத்தை இருபத்தோரு வருடங்களில் ஜபம் செய்து முடித்திருக்கிறார் தியாகராஜ ஸ்வாமிகள். அதாவது, சராசரியாக தினமும் ஒண்ணேகால் லட்சம் முறை ராம நாமத்தை ஜபித்துள்ளார்.


இதுபோல், வேறு எவரும் செய்ததில்லை! இதன் பலனால், ஸ்ரீராமபிரானை பலமுறை தரிசிக்கும் பாக்கியம் பெற்றார். ஸ்ரீ ராமதரிசன மகிமையையும் கீர்த்தனைகளாக வெளிப்படுத்தினார்.

ஸ்ரீ அரங்கனின் லீலை 

ஒருமுறை சித்திரைத் திருவிழாவின்போது ஸ்ரீரங்கம் சென்றிருந்தார் தியாகராஜர். அங்கு, தெற்குச் சித்திரை வீதியும் மேற்குச் சித்திரை வீதியும் சந்திக்கும் பகுதியில்,  அன்பர் ஒருவரது வீட்டில் தங்கினார் தியாகராஜர். 

சற்றுத் தொலைவிலே பொன்னால் ஆன குதிரை வாகனத்தில் ஸ்ரீரங்கநாதர் கம்பீரமாக உலா வந்தார். அவரை மனம் குளிர தரிசிக்க விரும்பிய தியாகராஜர், வாசலில் நின்று வணங்கி கீர்த்தனைகள் பாடிக் கொண்டிருந்தார். 


இந்த நிலையில், ஸ்வாமியின் குதிரை வாகனம் அடுத்த தெருவுக்குள் திரும்பிவிட்டது. எக்கச்சக்கமான கூட்டம்! தியாகராஜர் அப்படியும் இப்படியும் திரும்பி, ஸ்ரீரங்கநாதரின் முழுக் கோலத்தையும் தரிசிக்க முயன்றார். ஆனால், முடியாமல் போனது.

இதையடுத்து நடந்ததுதான் ஆச்சரியம். அடுத்த தெருவுக்குள் நுழைந்த ஸ்ரீரங்கனின் வாகனம் அதற்கு மேல் ஓர் அடிகூட நகரவில்லை. ஸ்வாமியை சுமந்து வந்தவர்கள், திடீரென தங்களின் உடல் மரத்துவிட்டதாகவும் இனியும் ஸ்வாமியை சுமக்க இயலாது என்றும் கூறி, அங்கேயே வாகனத்தை இறக்கி வைத்து விட்டார்கள்! அன்பர்கள், திருஷ்டி சுற்றினார்கள்; தேவதாசிகளை நடனம் ஆட சொன்னார்கள். எதுவும் பலன் தரவில்லை.

அப்போது, அங்கு இருந்த பட்டாசார்யர் ஒருவர் மேல் "அருள்" வந்தது. "என் பரம பக்தனான தியாகராஜன் என்னை தரிசிக்க முடியாத ஏக்கத்தில் நிற்கிறான். அவனை அழைத்து வந்து, என்னை தரிசிக்கச் செய்யுங்கள்; எல்லாம் நலமாகும்!" என்றார் அவர். 

உடனே ஆலய அதிகாரிகள், தியாகராஜர் குறித்து விசாரித்து, மிக்க மரியாதையுடன் அவரை அழைத்து வந்தனர். ஸ்ரீரங்கனை பூரணமாக தரிசித்த மகிழ்ச்சியில் கீர்த்தனை ஒன்று பாடி வழிபட்டார் தியாகராஜர்.

ஸ்ரீ ராமர் விஜயம் 

ராமபிரான், சீதாதேவி மற்றும் அனுமனுடன் தியாகராஜரின் இல்லத்துக்கு நேரில் வந்த அற்புதமும் ஒருமுறை நிகழ்ந்தது!

ஒருநாள், உஞ்சவிருத்தியில் போதுமான தானியம் கிடைக்கவில்லை. எனவே, அன்று முழுதும் உண்ணாமலேயே உறங்கிப் போனார் தியாகராஜர். திடீரென வாசல் கதவு தட்டப்படும் சத்தம். தியாகராஜர் சென்று கதவைத் திறந்தார். வெளியில் கிழவர் ஒருவர் தன் மனைவியுடன் நின்றிருந்தார்.

அவருக்கு பின்னால் மூட்டை, முடிச்சுகளுடன் பணியாள் ஒருவன்! அவர்களை அன்புடன் வரவேற்றார் தியாகராஜர். "சற்று இளைப்பாறுங்கள். விரைவில் போஜனம் தயாராகிவிடும்!" என்றார். புன்னகைத்த கிழவர், "தியாகராஜரே! பொறும். சமைப்பதற்கான பொருட்கள் எங்களிடமே உள்ளன. மேலும், இதோ, இவனே சமைப்பான்!" என்றார்.

அவரது பார்வையைப் புரிந்து கொண்ட பணியாள், அடுப்படிக்குச் சென்றான். பத்தே நிமிஷத்தில் தயாரானது உணவு. அனைவரும் பசியாறினர். அதன் பிறகு, இறை மகிமைகள் குறித்து அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் தியாகராஜர், விடிந்தே விட்டது! 


"உங்களது புகழ் எல்லா திசைகளிலும் பரவட்டும்” என்று தியாகராஜரை ஆசீர்வதித்துவிட்டுப் புறப்பட்டனர். அவர்களை வழியனுப்ப வாசலுக்கு வந்த தியாகராஜர் திடுக்கிட்டார். அங்கு, அவர்களைக் காணவில்லை. தன் இல்லத்துக்கு வந்தவர்கள், ஸ்ரீ ராமபிரான், சீதாதேவி மற்றும் அனுமன் என்பதை அதன் பிறகே உணர்ந்தார் தியாகராஜர். கீர்த்தனை ஒன்றையும் பாடிப் பரவசமானார்.


ஸ்ரீ தியாகராஜரின் சென்னை விஜயம் 

தன் சிஷ்யர் ஒருவரது அழைப்பை ஏற்று, சென்னைக்கு பயணித்தார் தியாகராஜர். அப்போது, சுந்தரமுதலியார் என்பவர், தனது சொந்த ஊரான கோவூர் திருத்தலத்துக்கு தியாகராஜரை அழைத்துச் சென்றார். அங்குள்ள இறைவனைக் கண்டு மெய்சிலிர்த்த தியாகராஜர் அங்கேயே கீர்த்தனைகள் பாடி வழிபட்டார்.

தனது வீட்டுக்கு வருமாறு தியாகராஜரை அழைத்தார் முதலியார். தியாகராஜரும் தன் சிஷ்யர்களுடன் சென்றார். அவரது வருகை ஊர் முழுக்க பரவியது. ஏராளமானோர் முதலியாரின் வீட்டில் கூடி அவரை தரிசித்தனர். பின்னர், தியாகராஜருக்கு உயர்ந்த வஸ்திரங்கள் மற்றும் பொன், பொருளை காணிக்கையாக அளித்தார் முதலியார். தியாகராஜரோ அவற்றை ஏற்க மறுத்துவிட்டார்.

ஆனாலும் தியாகராஜரது பல்லக்கில், பொற்காசுகளை மறைத்துவைத்தார் முதலியார்! இந்த விஷயத்தை சீடர்கள் சிலரிடம் தெரிவித்தவர், “காணிக்கையை ஏற்க ஸ்வாமிகள் மறுத்துவிட்டார். இருந்தாலும், ஸ்ரீ ராமநவமி, கிருஷ்ணஜயந்தி, வைகுண்ட ஏகாதசி முதலான உற்சவங்களை சிறப்புடன் நடத்த இந்தப் பொற்காசுகள் அவருக்குப் பயன்படும்” என்றார்.

அதிகாலையில் அங்கிருந்து புறப்பட்டனர். அவர்கள் காட்டு வழியே பயணித்தபோது, திடீரென தியாகராஜரது பல்லக்கின் மீது கற்கள் வந்து விழுந்தன. இது திருடர்களது வேலையே என்பதை அறிந்த சீடர்கள் கூக்குரலிட்டனர்.

தியாகராஜர் வியந்தார்! "திருடர்கள் வேலை என்று எப்படி யூகித்தீர்கள்?” என்று சீடர்களிடம் கேட்டார்.

"பல்லக்கில் முதலியார் பொற்காசுகள் மறைத்து வைத்ததை, தெரிந்து கொண்ட எவரோ, நம்மைப் பின்தொடர்கின்றனர் போல!" என்று உளறிவிட்டனர்  சீடர்கள். தியாகராஜருக்கு வந்ததே கோபம்!

"இதைத்தான் வேண்டாம் என்று நான் அங்கேயே சொல்லிவிட்டேனே. பொன்னும் பொருளும் நம்மிடம் இருக்கக் கூடாதப்பா. உண்மையான ராம பக்தர்களான நாம், இதன் மீது ஆசை வைக்கக் கூடாது. போகட்டும். முதலியார் மறைத்து வைத்த பொற்காசுகளை எடுத்து, அந்தத் திருடர்களைக் கூப்பிட்டு அவர்களிடம் கொடுங்கள்" என்றார்.

அதற்கு ஒரு சிஷ்யர், "முதலியார் இதைத் தங்களுக்காகத் தரவில்லை. உற்சவங்கள் நடத்தப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சொல்லி இருக்கிறார்" என்றார்.

"அப்படியெனில் இது நமது பொருளன்று ஸ்ரீ ராமனின் சொத்து. அவன் பொருளை அவனே காத்துக்கொள்வான்!" என்றார் தியாகராஜர். பயணம் தொடர்ந்தது. கல் விழுவதும் நின்றது! பொழுது மெள்ள விடிந்தது. வழியில் ஒரு சத்திரத்தில் தங்கினர். பல்லக்கின் மீது கல்லெறிந்த கள்வர்கள் அப்போது அங்கு வந்து தியாகராஜரின் காலில் விழுந்தனர்.

"ஐயா! கொள்ளை அடிக்கும் எண்ணத்துடன் நாங்கள் பல்லக்கை நெருங்கிய வேளையில், பல்லக்கின் முன்னும் பின்னுமாக வீரர்கள் இருவர் வில் ஏந்தி காவல் காத்துச் சென்றனர். எங்களை தாக்கவும் செய்தனர். அவர்களின் வீரம் சிலிர்க்க வைத்தது!" என்றனர்.


தியாகராஜர் புன்னகை பூத்தார். "அப்படியா! புண்ணியம் செய்தவர்கள் நீங்கள்! தகாத எண்ணத்துடன் வந்த உங்களுக்கு ராமபிரானும், இளையவர் லட்சுமணனும் காட்சி தந்திருக்கிறார்கள்" என்றார்.

பெறற்கரிய பாக்கியம் தங்களுக்குக் கிடைத்ததை எண்ணி நெகிழ்ந்த திருடர்கள் தங்களது செயலுக்கு தியாகராஜரிடம் மன்னிப்பு கேட்டனர். அவர்களை ஆசிர்வதித்து ஸ்ரீராம நாமத்தை அவர்களுக்கு உபதேசித்தார். 

ஸ்ரீ தியாகராஜரின் சமாதி 

தியாகராஜர், சமாதி ஆவது குறித்து பத்து நாட்களுக்கு முன்பே அவருடைய கனவில் வந்து கூறினாராம் ஸ்ரீ ராமன். இதையடுத்து தன் சிஷ்யர்களிடம், தான் சமாதியாகும் தினத்தை தெரிவித்த தியாகராஜர், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார். அதன்படியே, குறித்த தினத்தில் சமாதி ஆனார்.


சலசலக்கும் காவிரி நதிக் கரையோரத்தில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது தியாகராஜ ஸ்வாமிகளின் சமாதி.  உள்ளே நுழைந்தால் அளவில் பெரிய ஸ்ரீ வால்மீகி மண்டபம் பக்தர்களது நன்கொடைகள் மூலமாகக் கட்டப்பட்டுள்ளது. இங்கு, ராமாயண சம்பவங்கள் கதைச் சிற்பமாக காட்சி தருகின்றன. ஸ்ரீ தியாகராஜரது கீர்த்தனைகள் ராகம் - தாளம் முதலான விவரங்கள் குறிப்பிடப்பட்டு, இந்த மண்டபத்தில் கல்வெட்டு வடிவில் காணப்படுகின்றன.

தியாகராஜரின் சமாதியில் அவருடைய சிலா திருமேனி தவிர, ஸ்ரீ ராமன், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோரின் ஐம்பொன் விக்கிரகங்களும் உள் பிராகாரத்தில் விநாயகர், ஆஞ்சநேயர் ஆகியோரது சந்நிதிகளும் உள்ளன. தியாகராஜரின் சீடர்கள் நால்வர், இங்கு சமாதியாகி உள்ளனர். அந்த இடத்தில் நான்கு தூண்கள் எழுப்பப்பட்டுள்ளன.


கிழக்கு நோக்கிய தியாகராஜரின் சிலா திருமேனி. பின்னால் ஒரு மாடமும் அதில் துளசிச் செடியும் இருந்து வந்தது. 1925-ம் ஆண்டு வரை இந்த நிலைதான். அப்போது பெங்களூரில் வசித்த நாகரத்தினம்மாள் என்பவரின் கனவில் தியாகராஜர் எழுந்தருளி, தனக்கு கோயில் கட்டி, கும்பாபிஷேகம் செய்யும்படி பணித்தாராம். திருவையாறு வருகை தந்தார் நாகரத்தினம்மாள்.


கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதால், பிருந்தாவனமாக இருந்து வந்த சமாதியைக் கோயிலாக மாற்ற, காஞ்சி மகா பெரியவர், ஸ்வாமி ஹரிதாஸ்கிரி ஆகியோரும் ஆலோசனை சொன்னார்கள். அதன்படி, துளசிச் செடி போனது; மாடத்தின் மேல் தியாகராஜர் பூஜித்த ஸ்படிக லிங்கமும், ஸ்படிக மாலையும் இடம் பெற்றது. இப்போது இதற்கும் ஆராதனை உண்டு. 


கோயில் கட்டியதுடன் இங்கேயே தங்கியும் இருந்தார் நாகரத்தினம்மாள். பின்னாளில் அவர் இறைவனடி சேர்ந்த பிறகு, தியாகராஜரின் எதிரிலேயே காவிரியின் ஓரத்தில் சமாதி கொண்டார்.

தினமும் அதிகாலை ஐந்தரை மணிக்கு தியாகராஜருக்கு சுப்ரபாத சேவை நடைபெறும். தியாகராஜர் எப்படி அதிகாலையில் சுப்ரபாதம் பாடி ராமபிரானை எழுப்பினாரோ, அதே போல், அதே பாடல்களைப் பாடியே திருப்பள்ளி எழுச்சி நடைபெறுகிறது. மாலை வேளைகளில் சம்பிரதாயப்படி பஜனை பாடல்கள் பாடி
வழிபடுவர். விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், டோலோற்சவம், ஊஞ்சல் சேவை போன்றவை நடக்கும்.

ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை 

ஸ்வாமிகள் சமாதி ஆனது தை மாத பஞ்சமி தினம். எனவே, ஒவ்வொரு வருடமும் அன்றைய தினத்தில் ஸ்வாமிகளுக்கு ஆராதனை உற்சவம் விமரிசையாக நடைபெறும். ஸ்வாமிகள் வசித்த இல்லத்தில் இருந்து உஞ்சவிருத்தி புறப்படும்.

நாடெங்கிலும் உள்ள ஸ்வாமிகளின் பக்தர்கள்  திருவையாற்றில் குவிகிறார்கள். இசையால் வாழ்ந்த மகானின் சந்நிதியில், அவரது கீர்த்தனைகளை இசைத்து அவருக்குத் தங்கள் அஞ்சலியைத் தெரிவிக்கின்றனர்.



அன்றைய தினத்தில் மூலவர் ஸ்ரீ தியாகராஜருக்கும் உற்சவர் ஸ்ரீ தியாகராஜருக்கும் சமாதிக்கும் ஒரே நேரத்தில் வெவ்வேறு அர்ச்சகர்கள் அபிஷேகங்கள் செய்வார்கள். இங்கே அபிஷேகம் துவங்கும் அதே வேளையில், வால்மீகி மண்டபத்தை ஒட்டியுள்ள முன்பகுதியில், வித்வான்கள் அமர்ந்து பஞ்சரத்ன கீர்த்தனைகளை இசைப்பர். 


இவர்கள் கீர்த்தனைகளைப் பாடி முடிப்பதற்கு சுமார் ஒரு மணி நேரமாகும். அதற்குள் அபிஷேகமும் பூர்த்தி ஆகிவிடும். பின்னர், மகா கற்பூர ஆரத்தி காண்பிக்கப்படும். இதைத் தொடர்ந்து, அன்னதானம் நடைபெறும்.



ஒவ்வொரு மாதமும் தேய்பிறை பஞ்சமி தினத்தன்று ஸ்வாமிகளின் உற்சவர் விக்கிரகம், நான்கு வீதிகளிலும் புறப்பாடாக எழுந்தருளும். ஸ்ரீ ராமநவமி, தியாகராஜரின் ஜயந்தி தினமான சித்திரை மாத பூசம் போன்ற தினங்கள் விசேஷமாக அனுஷ்டிக்கப்படும்.


தியாகராஜர் ஸ்வாமிகள் தனது கீர்த்தனைகளால் இன்றும் நம்முடன் வாழ்கிறார். தன் சந்நிதிக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு நல்லாசிகளை வழங்கி வருகிறார். ஸத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் பாத கமலங்களைப்போற்றி அவரது அருளை பெறுவோமாக !

... ராம் ... ராம்....

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe