திருக்குறள்
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள. - #241
விளக்கம்: செல்வங்கள் எல்லாவற்றினுள்ளும் சிறந்த செல்வம் கருணையுடன் வாழ்வது. பொருளால் வரும் செல்வங்கள் தாழ்ந்த குணமுடையாரிடத்திலும் உண்டு.
கதை:
அக்பர் சிறந்த தெய்வ பக்தர். இந்துக்களையும், முஸ்லீம்களையும் சமமாகவே நடத்தினார். அவருடைய மந்திரியாக இருந்த ஆத்மாராமின் புதல்வனான துளஸிதாஸர் துறவி. அதோடு ராமதரிசனமும் பெற்றவர். துளஸிதாஸர் ராமதரிசனம் பெற்றதை அறிந்த அக்பர், காசி நகருக்கு வந்து, "துளஸி! எம் குலத்தவர்களும், நானும் ராமரை தரிசிக்க ஆசைப்படுகிறோம். வரவழைத்துக் காட்ட வேண்டும்” என்று கேட்டார்.
“பாதுஷா! இறைவன் பக்தனின் அடிமையல்ல. கூப்பிட்டபோதெல்லாம் வந்து எதிரே நிற்பதற்கு. அது அபசாரமான செயல்" என்றார் துளஸிதாஸர். "இவன் ராமதரிசனம் பெற்றான் என்று சொல்வதெல்லாம் பொய்; செய்வதெல்லாம் பித்தலாட்டம்” என்று முஸ்லீம்கள் தூற்றினர்.
உடனே ஆஞ்சனேயரைத் தியானித்தார் தாஸர். எங்கிருந்து எப்படி வந்த தென்றே தெரியாமல் மரங்கள்தோறும் குரங்குகள் தாவிக் குதித்தன. சில முஸ்லீம்களின் அங்கிகளைப் பறித்துக் கொண்டன. அக்பர், “துளஸி இது என்ன ?" என்று கேட்டார்.
"ஒருபங்கே இத்தனை அட்டகாசம் செய்தால் 999 பங்கும் வந்தால் காசி தாங்குமா ? ராமதரிசனம் வேண்டாம். இவைகளைப் போகச் சொல்லுங்கள்” என்று இறைஞ்சினார் அக்பர்.
மீண்டும் தாஸர் மாருதியைப் பிரார்த்திக்க குரங்குகள் மறைந்தன. அக்பருக்கு தாஸரிடம் மரியாதை பெருகியது. மடத்துக்கு ஏராளமாகப் பொருளுதவிகள் செய்தார்.
மடத்தில் சாதுக்கள் வடிவில் தங்கியிருந்த நான்கு கொள்ளையர்கள் ஒரு அமாவாசை இரவில் மடத்துப் பொருட்களைக் கொள்ளையடித்து மூட்டை கட்டிக் கொண்டு சென்றனர். தோட்ட எல்லையைக் கடக்கும் சமயம் இரு காவலர்கள் அவர்களைப் பிடித்தனர்.
“அப்பனே! எங்களைத் தப்பிக்க விட்டாயானால் திருடியதை ஆறு பங்கு போட்டுக் கொள்ளலாம்" என்று அவர்கள் ஆசைகாட்ட “இந்தச் செல்வம் உன்னிடம் இருந்தாலும், என்னிடம் இருந்தாலும் ஒரே மதிப்புதான். ஆனால் அருட்செல்வத்தை உடையவனே உயர்ந்தவன்” என்றான் கருநிறத்தான்.
காவலர்களை அடித்து வீழ்த்தித் தப்பிக்க முற்பட்ட அவர்களை இருவரும் அடித்துத் துவைத்து மற்ற சேவகர்களிடம் ஒப்படைத்தனர்.
மறுநாள் காலை இதையறிந்த தாஸர் “கரடு முரடான மலைப்பாறை கூட ஜனங்கள் நடப்பதால் பாதையாகிறது. மடத்தில் ஞான உபதேசங்களைக் கேட்டும் களவாடத் துணிந்தீர்களோ! என்னிடம் கேட்டிருந்தால் பகலிலேயே பகிரங்கமாக எடுத்துச் சென்றிருக்கலாமே! விரும்பிய நீங்களே இந்தப் பொருட்களை எடுத்துக்கொண்டு போய் அனுபவியுங்கள்" என்றார்.
துளஸிதாஸர் திடுக்கிட்டார்!
"மடத்துக் காவலர்கள் சாதுக்களை அடிப்பதா? இதென்ன கொடுமை! யார் அவர்கள்? அவர்களை அடையாளம் காட்டுங்கள்! தகுந்தபடி தண்டிக்கிறேன்" என்று ஆவேசமாக எழுந்தார்.
மடத்துக் காவலர்களைப் பார்த்தவர்கள் "நேற்று எங்களை சிட்சித்தவர்கள் இந்த கூட்டத்தில் இல்லை" என்றனர். ராம லட்சுமணர்கள் வில்லோடு எதிரே தோன்றி, "நாங்களே அவர்களை அடித்தவர்கள். தண்டனை கொடு" என்றனர்.
துளஸிதாஸர் உருகினார். அவரால் கள்வர்களுக்கும் ராமதரிசனம் கிடைத்தது. "என் பொருட்டு மடத்துப் பொருட்களைக் காத்தனையோ" என்று காலடியில் சாஷ்டாங்கமாய் விழ, "துளஸி! இனி நான் சிரமப்படக் கூடாதென்றால் பொருளை சேமித்து வைக்காதே! பசிப்பிணியைப் போக்க அன்னதானம் செய்" என்று கூறி மறைந்தனர் ராம லட்சுமணர்கள்.
அன்று முதல் மடத்தில் தொடர்ந்து அன்னதானம் நடந்தது.
குழந்தைகளே! நாமும் நம் தேவைக்கேற்ப பொருட்செல்வத்தை சேமித்து, நம்மால் இயன்ற உதவியை பிறருக்கும் செய்து நிறைந்த அருட்செல்வத்தை பெற்று வாழ்வில் வளம் பெறுவோமாக!