ஒரு சிறிய சாலக்குடி எனும் கிராமம். மத்தியில் அழகான ஒரு கிருஷ்ணன் கோவில். அர்ச்சகர் வித்யாபதியும் அவரிடம் உதவிக்கு வேலைபார்த்துவரும் சிறுவன் துளசிராமனும் காலை 4 மணிக்கே கோவிலுக்கு வந்து விடுவார்கள்.


சிறுவன் துளசிராமனுக்கு கோவில் தோட்டத்து பூக்களையெல்லாம் பறித்து மாலையாகத் தொடுத்து தரவேண்டிய பணி.

கிருஷ்ண பகவானே கதி என்று கிடக்கும் துளசிராமனுக்கு, அந்தப் பூப்பறிக்கும் நேரமும் கிருஷ்ணனின் நினைப்புதான். "கிருஷ்ணார்ப்பணம்" என்று மனதுள் சொல்லியபடியே பூக்களைப் பறித்து, தொடுப்பான்.

பத்து, பதினைந்து மாலைகள் கட்டி முடித்தவுடன், ஏதோ அவனே கிருஷ்ணனுக்கு சூட்டி விடுவது போன்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, அர்ச்சகரிடம் கொடுத்து விடுவான்.


ஒருமுறை அர்ச்சகர் வித்யாபதி, கிருஷ்ணரின் சிலைக்கு மாலை சூட்ட போனால் ஏற்கனவே ஒரு புதுமாலையுடன் கிருஷ்ணன் சிலை பொலிவு பெற்று இருந்தது. அதைப் பார்த்த அர்ச்சகருக்கு அதிர்ச்சி, இது சிறுவன் துளசிராமனின் குறும்பாக இருக்குமோ என்று சந்தேகம்.

அவனை கூப்பிட்டு, "துளசிராமா இதெல்லாம் அதிகப்ரசங்கித்தனம்; நீ மாலை கட்டவேண்டுமே தவிர, பரந்தமானுக்கு சூட்டக்கூடாது ” என்று கண்டித்தார்.

"சுவாமி…! நான் சூட்டவில்லை; கட்டிய மாலைகள் மொத்தம் 15. அத்தனையும் உங்களிடம் கொடுத்து விட்டேன்!” என்ற அவன் சொற்கள் அவர் காதில் விழவேயில்லை.

"நாளையிலிருந்து அண்டாக்களில் தண்ணீர் நிரப்பும் பணியைச் செய். நீ இனிமேல் பூ கட்டவேண்டாம் .” கட்டளையாக வந்தது .

இதுவும் இறைவன் செயல் என்று, துளசிராமன் நீரிறைக்கும் போதும், தொட்டிகளில் ஊற்றும்போதும், "கிருஷ்ணார்ப்பணம்” என்று மனம் நிறைய சொல்லிக்கொள்வான். மனமும் நிறைந்தது!

அப்போது சிலைக்கு அபிஷேகம் செய்ய அர்ச்சகர் வரும்முன்பே , அபிஷேகம் நடந்து முடிந்து, கருவறை ஈரமாகி இருந்தது. நனைந்து நீர் சொட்டச் சொட்ட கிருஷ்ணர் சிலை சிரிக்கும்.

அர்ச்சகருக்கு கடும் கோபம், "துளசிராமா..நீ அபிஷேகம் செய்யுமளவுக்கு துணிந்து விட்டாயா! உன்னோடு பெரிய தொல்லையாகி விட்டதே” என கோபத்துடன் திட்ட ஆரம்பிக்க,



துளசிராமன் கண்களில் கண்ணீர். "ஸ்வாமி நான் அண்டாக்களை மட்டும்தான் நிரப்பினேன்; உண்மையிலேயே கிருஷ்ணனுக்கு எப்படி அபிஷேகம் ஆனது என்று எனக்கு தெரியாது!",  என்றான்.

அவ்வளவுதான் அர்ச்சகர் வித்யாபதி மறுநாளே மடப்பள்ளிக்கு மாற்றிவிட்டார். பிரஸாதம் தயாரிப்பு பணிகளில் ஒரு சிற்றாளன் ஆனான் சிறுவன். இங்கும் காய் நறுக்கும்போதும் அவன், "கிருஷ்ணார்ப்பணம்” என்றே தன்னுடைய செய்கைகளை கடவுளுக்கே காணிக்கையாக்கினான்.

அன்று அர்ச்சகர் முன்னெச்சரிக்கையாக சன்னிதானத்தை பூட்டிச் சாவியை எடுத்துச் சென்றுவிட்டார் .

மறுநாள் அதிகாலையில் சந்நிதிக் கதவைத் திறக்கும்போதே கண்ணன் வாயில் சர்க்கரை பொங்கல் நைவேத்யம்.

"மடப்பள்ளியில் அப்போதுதான் தயாராகி, நெய்விட்டு இறக்கி வைக்கப்பட்டிருந்தது. அதற்குள் எப்படி இங்கு வந்தது? நானும் கதவைப்பூட்டிதானே சென்றேன். பூனை, எலி கொண்டு வந்திருக்குமோ ?"

துளசிராமனுக்கு எந்த வேலை தந்தாலும் அந்தப்பொருள் எப்படியோ எனக்கு முன்பே இங்கு வந்துவிடுகிறதே , அவன் என்ன மந்திரவாதியா? "என்று குழம்பினார் அர்ச்சகர்.

இன்று எதுவும் கண்டிக்கவில்லை, "துளசி ராமா! நாளை முதல், நீ வாசலில், பக்தர்களின் செருப்பை பாதுக்காக்கும் வேலையைச் செய். நீ அதற்குத்தான் சரியானவன்.." என்று கூறினார்.

"பூ, நீர்,பிரஸாதம் எல்லாம் நல்ல பொருட்கள்; சந்நிதிக்கு வந்துவிட்டன ; இனி என்ன ஆகிறதென்று பார்ப்போம் ; ” இதுதான், அர்ச்சகரின் எண்ணம்.

இதையும் கடவுள் விருப்பம் என்று ஏற்றுக் கொண்ட துளசிராமன் அன்றுமுதல் வாசலில் நின்றிருந்தான். அதே, "கிருஷ்ணார்ப்பணம்" என்றே அந்த வேலையையும் செய்து கொண்டு இருந்தான். இன்றும் அர்ச்சகர் பூட்டி, சாவி கொண்டு சென்றார்.


மறுநாள் காலை; சந்நிதிக்கதவு திறந்ததும், அர்ச்சகர் கண்ட காட்சி உடலெல்லாம் அவருக்கு நடுங்கத்தொடங்கியது.

இதென்ன கிருஷ்ணா, உன் பாதங்களில் ஒரு ஜோடி செருப்பு பாதகமலங்களின் பாதுகையின் பீடத்தில் சாதாரண தோல் செருப்பு எப்படி வந்தது ?

துளசிராமன் எப்படிப்பட்டவனானாலும், சந்நிதிப் பூட்டைத் திறந்து இப்படி செருப்பை வைக்க யாருக்குத்தான் மனம் வரும்? ஆச்சரியம், அச்சம் அர்ச்சகருக்கு வேர்த்துக் கொட்டியது.

அப்போது எங்கிருந்தோ ஒரு குரல் "அர்ச்சகரே பயப்பட வேண்டாம் அந்த துளசிராமனுக்கு நீ எந்த வேலை தந்தாலும், அவன், "கிருஷ்ணார்ப்பணம்" என்று எனக்குக் காணிக்கையாக்கி விடுகிறான். அப்படி அன்போடு அவன் தரும் காணிக்கையை நான் மனமுவந்து ஏற்றுக்கொண்டேன்.

நினைவெல்லாம் எங்கோ இருக்க செய்யும் பூஜையை விட, எதை செய்தாலும் எனக்குக் காணிக்கையாக்குபவனின் அன்பை நான் ஏற்றுக்கொண்டேன்.

"துளசிராமன் ஒரு யோகி.  அவன் அன்பு எனக்குப் பிரியமானது!" என்றார் பகவான்.

கிருஷ்ண பகவானின் இந்தக் குரல் கேட்டு வாசல் பக்கம் ஓடிவந்து அந்த யோகி சிறுவன் துளசிராமனின் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார் அர்ச்சகர் வித்யாபதி.


மாயக் கண்ணனின் லீலைகளை படிக்கும்.. கேட்கும்.. பார்க்கும்..நாமும் எல்லா செயல்களையும் பரந்தாமன் திருவடி அர்ப்பணம் செய்துக் கொண்டே இருக்கலாம்.

... ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் ...

1 Comments

Unknown said…
Sarvam Sri Krishnarpanam
Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe