நாம் அனைவரும் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று சுகமாக வாழ, அந்த வளங்களை வாரிவழங்கும் தெய்வம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியைத் தொடர்ந்து வழிபடுவது மிகவும் முக்கியமானதாகும்.

நாம் அனைத்து தெய்வங்களையும் நித்யமுறையில் சாதாரணமாக வழிபட்டாலும், அந்தந்த தெய்வங்களுக்குரிய முக்கியமான நாட்களில், ரிய முறையில், வ்ரதமிருந்து ஆராதனை செய்வதன் மூலம் அந்த வ்ரதங்கள் மற்றும் பூஜைகளின் சிறப்பான பலன்களை நிச்சயமாக அடைய இயலும் என அறிந்து நம் முன்னோர்கள் வழி வகுத்துக் கொடுத்துள்ளனர்.


Varalakshmi Puja - Slokas4kids.blogspot.com


சகல சௌபாக்யங்களுக்கும் ஐஸ்வர்யங்களுக்கும் அதிபதி தேவி ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஆவார். பதினாறு சௌபாக்யங்களையும் வரமாக அளித்துக் காக்கும் தெய்வம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியே ஆவார்.


இந்த விரதம் பெண்களின் தாலி பாக்கியத்தின் ஸ்திரத்தன்மைக்கும், தங்கள் கணவர் மற்றும் குழந்தைகளின் நல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும் என்ற நம்பிக்கையுடன் ஸ்ரீ வரலக்ஷ்மி விரதத்தை மேற்கொண்டு தவறாமல் கடைபிடித்து வருகின்றனர்.

அஷ்டலக்ஷ்மி


இப்புவியில் மனித வாழ்வின் வளத்தையும் மேம்பாட்டினையும் கட்டுப்படுத்தும் காரணிகளாக தனம்(Sri), பூமி(Bhu), அறிவு (Vidhya), அன்பு(Priti), புகழ்(Keerti), அமைதி(Santi), மகிழ்ச்சி(Tushti), பலம்(Pushti) ஆகிய எட்டும் கூறப்பட்டு, அவை அனைத்தையும் தேவி ஸ்ரீமஹாலக்ஷ்மியின் பரிமாணங்களாகவே நம் முன்னோர்களான ரிஷிகள் கண்டு உள்ளனர். முக்கியமான இந்த எட்டு ஐஸ்வர்யங்களையும் அஷ்டலக்ஷ்மிகளாகக் காண்பதே நம் ஸநாதந தர்மம் ஆகும்.


Slokas4kids - Varalakshmi vritham

மிக உன்னதமான இந்த விரதம் பரமேஸ்வரனால் பார்வதிதேவிக்கே உபதேசிக்கப்பட்டதை சூத மஹரிஷி சௌநகாதி மஹரிஷிகளுக்கு நைமிசாரண்ய க்ஷேத்ரத்தில் விளக்கியதாக சொல்லப்படுகிறது.


பரமேஸ்வரனே இந்த வ்ரதத்தை முக்கியமாக பெண்கள் எப்பொழுது, எப்படி அனுஷ்டித்து, எவ்வாறு சௌபாக்யங்களை அடைவார்கள் என விளக்கியதாக அறியப்படுகிறது. பார்வதி தேவிக்கு பரமேஸ்வரனால் இந்த வ்ரதம் உபதேசிக்கப்பட்ட பொழுது, வரலக்ஷ்மி வ்ரதத்தின் கீழ்க்கண்ட புராணத்தை அவரே கூறியுள்ளார்.

புராணம்

விதர்பா ராஜ்யத்தில் குந்தினபுரா நகரத்தில் வாழ்ந்த சாருமதீ என்ற பெண்ணின் பக்தியில் மகிழ்ந்த மஹாலக்ஷ்மி அவளது கனவில் தோன்றி அவளுக்கு ஸ்ரீ வரலக்ஷ்மி வ்ரதத்தை உபதேசித்து, ஸ்ராவண மாதம் பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமையன்று நடத்தச் சொன்னார். அவரும் தன் கணவர் மற்றும் அண்மையிலிருந்த பெண்களுடன் கூடி தெய்வம் கூறிய படி வரலக்ஷ்மி வ்ரதத்தை ஸ்ரத்தையாக அனுஷ்டித்தனர்.

மகிழ்ந்த ஸ்ரீ மஹாலக்ஷ்மி ப்ரத்யக்ஷமாகி அவர்களுக்கு சகல சௌபாக்யங்களையும் ஐஸ்வர்யங்களையும் அளித்தார். ஸ்ரீதேவியை வணங்கிப் போற்றும் கீழ்க்கண்ட ஸ்தோத்ரம் அந்தப் பெண்ணாலேயே பாடப்பட்டது.

லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ர ராஜதநயாம்
ஸ்ரீரங்க தாமேஸ்வரீம்
தாஸீபூத-ஸமஸ்த-தேவவநிதாம்
லோகைக-தீபாங்குராம் |

ஸ்ரீமந்மந்தகடாக்ஷ-லப்த்தவிபவ
ப்ரஹ்மேந்த்ர கங்காதராம்
த்வாம் த்ரைலோக்ய குடும்பிநீம்
ஸரஸிஜாம் வந்தே முகுந்தப்ரியாம் ||

இந்த வ்ரதத்தைப் பற்றி மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் தனது ஸ்ரீவரலக்ஷ்மி நமஸ்துப்யம் என்ற க்ருதியில் “ஸ்ராவண பௌர்ணமி பூர்வஸ்த ஸுக்ரவாரே சாருமதீ பிரப்ருதிஹி பூஜிதாகாரே” என்று பாடியிருக்கிறார்.

மற்றொரு புராணத்தில், தேவலோக மங்கையர்களே ஸ்ரீவரலக்ஷ்மி வ்ரதத்தை ஸ்ரத்தையாக அனுஷ்டிப்பதாக சொல்லப்படுகிறது. தேவி பார்வதியின் சாபத்திற்கு ஆளான சித்ரநேமி என்கிற தேவகணம் தொழுநோயால் அவதிப்பட்டு, பின் தேவியிடம் சாப விமோசனம் கேட்டு, அதன்படி அவர் தேவ அப்ஸரஸ் பெண்கள் கடைபிடித்த ஸ்ரீவரலக்ஷ்மி வ்ரதத்தைக் கண்டு, தானும் ஸ்ரீவரலக்ஷ்மி வ்ரதத்தை அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றாராம்.


வரலக்ஷ்மி விரத மஹிமை

ஸ்ரீ வரலக்ஷ்மி வ்ரதத்தின் மஹிமையை மேலும் விளக்கும் விதமாக ச்யாமபாலா என்ற பெண்ணின் புராணத்தை கீழே பார்க்கலாம். 


பத்ரச்ரவஸ் என்கிற மன்னனும் அவர் மனைவி சுரசந்த்ரிகாவும் சிறந்த விஷ்ணு பக்தர்களாக இருந்தனர். அவர்களது மகள் ச்யாமபாலா சக்ரவர்த்தியான மாலாதரன் என்பவருடன் திருமணம் முடிந்து சுகமாக வாழ்ந்து வந்தார். சுரசந்த்ரிகாவின் பக்தியில் மகிழ்ந்த மஹாலக்ஷ்மி ஒரு வயதான சுமங்கலியாகத் தோன்றி, அவர்கள் மேலும் நன்மைகளைப் பெற ஸ்ரீவரலக்ஷ்மி வ்ரதத்தை உபதேசிக்க நேரில் வந்தார். ஆனால் அரசியோ வந்த மஹாலக்ஷ்மியை யாரென்று அறியாமல், யாசகம் கேட்க வந்தவராக எண்ணி அவமதித்து அனுப்பினார்.


அச்சமயம் பெற்றோரைக் காணவந்த ச்யாமபாலா, தான் அந்த மூதாட்டியைக் கண்டு, அன்புடன் விவரம் அறிந்து, ஸ்ரீவரலக்ஷ்மி வ்ரதத்தைக் கடைபிடிக்க உபதேசம் பெற்றாள். ஸ்ரீதேவியிடம் இருந்தே தான் அறிந்த வ்ரதத்தை மிகவும் சிறப்பாக அனுஷ்டித்து, பல சௌபாக்யங்களை அடைந்தாள்.


தேவியை அவமதித்த பெற்றோர் தங்கள் செல்வங்களையும் சுகங்களையும் இழந்து வருந்தி, பின் ச்யாமபாலாவிடம் உபதேசம் பெற்று ஸ்ரீ வரலக்ஷ்மி வ்ரதத்தை சிறப்பாக அனுஷ்டித்து, இழந்த செல்வங்களையும் சுகங்களையும் திரும்ப அடைந்தனராம்.


புராணக்கதைகள் இவ்வாறு ஸ்ரீ வரமஹாலக்ஷ்மி வ்ரதத்தின் மகிமைகளை விளக்க, காலம்காலமாக நமது பெண்ணினம் இந்த வ்ரதத்தை தாங்களும் விருப்பத்துடன் செய்து பயனடைந்து வருகின்றனர்.


காலம்

ஒவ்வொரு வருடமும் ஆடி அல்லது ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன் வருகிற வெள்ளிக்கிழமையன்று வரலக்ஷ்மி விரத பூஜையை செய்ய வேண்டும்.


விசேஷம்

அம்பாளுக்கு வரலக்ஷ்மி பூஜையின் போது கீழ்கண்டவற்றை செய்வது மிகவும் விசேஷமானதாக நமது பெரியோர்கள் கூறியுள்ளனர்.


1. தாமரை மலர்களால் அர்ச்சனை செய்வது.

2. கலசத்திற்கு சிவப்பு பட்டு ரவிக்கைத்துணி சாத்துவது.

3. செவ்வரளி மலர்கள் மற்றும் வில்வ பத்ரம்.

4. சர்க்கரை பொங்கல் நைவேத்யம்.

5. தாழம்பூ சமர்ப்பிப்பது.   


திருப்பாற்கடலில் வியாழன் அன்று மாலை மஹாலக்ஷ்மி வெளிப்பட்டாள். அதனால் வ்ரதத்திற்கு முந்தைய நாளான வியாழக்கிழமை அன்றே வரலக்ஷ்மியை வீட்டினுள் அழைத்து விடுவது வழக்கம்.


வெள்ளிக்கிழமையன்று பெண்கள் தேவியை வரலக்ஷ்மியாக விரும்பிய பொருளின் சீர் சிறப்புமிக்க வடிவிலுள்ளவளாக விரும்பியதைத் தருபவளாக வீட்டிற்குள் அழைத்து வழிபடுவர்.



நன்கு அலங்கரித்த மண்டபத்தில் கீழே நெல்லும், அதன் மேல் ஒரு தாம்பாளத்தில் அரிசியும் வைத்து அதன் மேல் செல்வத்திற்கு ஏற்றவாறு தங்கத்திலோ, வெள்ளியிலோ, தாமிரத்திலோ உள்ள கும்பத்தில் அரிசி, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், நாணயம், எலுமிச்சைப்பழம்  முதலியவை நிரப்பி, மேல் மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து அதன் மேல் தங்கம் அல்லது வெள்ளியில் செய்த லக்ஷ்மீ ப்ரதிமை அல்லது லக்ஷ்மியின் திருமுகமண்டலத்தை வைத்து, ஆடை, நகை முதலியவற்றால் அலங்கரித்துப் பூஜிப்பர்.


தேங்காயை உரித்தோ உரிக்காமலோ மஞ்சள் பூசி குங்குமப்பொட்டிட்டு சொம்பின் மேல் வைத்து நடுவில் முகத்தைப் பொருத்தி அலங்கரிப்பர். கலசத்திற்கும் தேங்காய்க்கும் இடையே மாவிலைகள் தெரியும் படி மாவிலைக் கொத்து வைத்து அதன் மீது தேங்காய் வைப்பர்.


ஐந்து தாழம்பூ மடல்களைச் செருகுவர். பின்புறம் தேங்காய் நாரில் பட்டுச் சவுரி, குஞ்சலம் அமைத்து பின்னலாக எண்ணி அழகுறப் பூக்கள் செருகுவர். முன்புறம் தேவியின் முகம் தெரியும் படி முகக் கண்ணாடி அமைப்பர்.


சொம்பின் கழுத்தில் கருகமணி, முத்துப் பவழம் முதலிய மணி மாலைகள், இடுப்பில் பட்டுப்பாவாடை, மார்பில் ரவிக்கை என்று ஆடை அலங்காரம் உண்டு.


மாக்கோலமும் செம்மண்ணுமிட்ட பலகையில் வடக்கு நோக்கியிருக்கும்படி தலைவாழையிலை நுனி போட்டு பரப்பி, அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைப்பர்.


ஐந்து முகமுள்ள குத்துவிளக்கு ஏற்றி வைத்தல் வேண்டும்.


கலச  பூஜைக்கு முன்னர் வாசல்புறத்துத் திண்ணையை அலங்கரித்து அதில் விக்ரஹங்களை வைத்து தீப ஒளியில் துலங்குகிறவளைப் பாடிப் பாடி மகிழ்வித்து உள்ளே அழைத்துச் செல்வர். இழந்த செல்வத்தைப் பெற, பிறவி ஏழ்மையையும், துன்பச் சூழலையும் தவிர்க்க இதனைச் செய்வர்.


அம்மனை அழைத்தல்

அலங்கரிக்கப்பட்டு மணையில் ஸ்ரீவரலக்ஷ்மி தேவியாக வீற்றிருக்கும் கலஸத்தை அல்லது பிம்பத்தை வீட்டின் வாசலுக்கு எடுத்துச் சென்று, அங்கு கோலத்தில் கிழக்கு நோக்கி அமர்த்தி, விளக்கு ஏற்றி, வரலக்ஷ்மி தேவி இல்லத்திற்கு வந்து, பூஜையை ஏற்றுக் கொண்டு அருள்புரிய வேண்டிக்கொண்டு, மஹாலக்ஷ்மி பாடல்கள் ஒன்றிரண்டைப் பாடி, தேங்காய் பழம் நைவேத்யம் செய்து, தூப, தீப கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து, வீட்டுப்பெண்கள் அம்மனை மணையோடு தூக்கி, பாட்டுப் பாடிக்கொண்டே இல்லத்திற்குள் வந்து, பூஜை மண்டபத்தில் / பீடத்தில் தேவியை அமர்த்த வேண்டும்.



இனி வரலக்ஷ்மி அம்மன் பூஜைக்குத் தயார். மேலே தெரிவித்தபடி, பூஜையன்று காலையிலோ முதல் நாளோ தேவியை தங்கள் குடும்ப வழக்கப்படி அமைத்துக் கொள்ளலாம்.




சாதம், நெய், பருப்பு, பாயசம், பச்சைஅரிசி இட்லி, இனிப்பு, உப்பு மற்றும் எள் கொழுக்கட்டை, உளுந்து வடை, தேங்காய், வாழைப்பழம் மற்றும் இதர பழங்கள்.  


Slokas4kids-neivedyam


1. லக்ஷ்மி ராவே மா இன்டிக்கி


2. பாக்யாத லக்ஷ்மி பாரம்மா


3. ஸ்ரீ வரலக்ஷ்மி நமஸ்துப்யம்




Click on the below image to view the Stotras.





அஷ்டலக்ஷ்மியினர் அனைவரையும் ஒன்றாக பூஜை செய்த பலன்களை அளிக்கும் மகத்தான ஸ்ரீ வரமஹாலக்ஷ்மி விரதத்தை செய்து சகல சௌபாக்கியங்களையும் பெறுவோமாக !

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe