குறள்:
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து. (குறள் எண்:353)
பொருள் :
சந்தேகத்திலிருந்து விலகி கடவுளைத் தெளிவாக உணர்ந்தவருக்கு, அவர் வாழும் பூமியை விட, விரும்பும் சொர்க்கம் மிக அருகில் இருப்பதாகும்.
நாரதர் "ஓம் நமோ நாராயணா! இந்த மந்திரத்துக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளவே நான் இங்கு வந்துள்ளேன்!" என்று கூறினார்.
கதை:
நாரதர் நாராயண மந்திரத்துக்கு என்ன அர்த்தம்னு தெரிந்து கொள்ள ஆசைப்பட்டார். வைகுண்டம் போய் விஷ்ணுவிடம் கேட்டார். எனக்கும் தெரியாதப்பா, கோதாவரிக்கரையில் ஒரு வண்டு இருக்கிறது. அதனிடம் போய் "ஓம் நமோ நாராயணா" என்றால் என்ன அர்த்தம்னு கேளுன்னு சொல்லி விஷ்ணு நாரதரை அனுப்பினார்.
நாரதரும், கோதாவரி நதிக்குப்போய் வண்டிடம் "ஓம் நமோ நாராயணா! இதுக்கு என்ன அர்த்தம்?" என்று கேட்டார். நாரதர் கேட்டு முடிக்கும் முன்பே வண்டு இறந்து விட்டது.
நாரதர் விஷ்ணுவிடம் போய் "எனக்கு அர்த்தம் தெரிந்து விட்டது, இந்த மந்திரத்தை யாராவது சொன்னால் இறந்து போய்விடுவார்கள்" என்று சொன்னார்.
விஷ்ணு சிரித்துக்கொண்டே,"சரி, கிருஷ்ணா நதிக்கரையில் ஒரு பூவரச மரத்தில் கிளி ஒன்று இருக்கிறது, அதைப்போய்க் கேள்" அப்படின்னார்.
நாரதர் கிளியிடம் கேட்க கிளியும் இறந்து போனது.
விஷ்ணு "அவந்திபுரத்தில் ஒரு பிராமணன் வீட்டில் ஒரு மாட்டுக்குக் கன்று பிறக்கும், அதைப் போய்க்கேள்" என்று சொன்னார்.
அங்கே போய்க்கேட்டவுடன் கன்றுக்குட்டியும் இறந்து போனது.
நாரதர் விஷ்ணுவிடம் "சுவாமி! நாராயண மந்திரத்துக்கு அர்த்தம் தெரிந்து கொண்டேன்" எனக் கூறினார்.
விஷ்ணு "நாரதா! காசி நகரத்தில் ஒரு ராஜாவுக்கு ஒரு ஆண் குழந்தைப் பிறக்கப்போகிறது, அந்தக் குழந்தையிடம் போய்க் கேள்!" எனக் கூறினார்.
"ஐயய்யோ! குழந்தையிடம் போய் கேட்டால், குழந்தையும் இறந்து போய் விடுமே! என்ன செய்வது ?" என்ற பயத்தில் மஹாவிஷ்ணுவின் கட்டளையை மீற முடியாமல் நாரதர் காசிக்கு சென்றார்.
காசியில் நாரதரை வரவேற்ற குழந்தை "நான் வண்டு இல்லை, கிளி இல்லை, கன்றுக்குட்டியும் இல்லை. இளவரசன்! உங்களுக்கு என்ன வேண்டும். என்னிடம் கூறுங்கள்" என்றது.
அதைக்கேட்டவுடன் குழந்தை, "நாரதரே! இந்த மந்திரத்தைக் கேட்டவுடன் எனக்கு மேல் பிறவி அடையும் பாக்கியம் கிடைத்தது. நீங்கள் என் மேல் கொண்ட கருணையால் ஒவ்வொரு பிறவியிலும் வந்து சொன்னீர்கள். அந்தந்தப் பிறவியைத்தாண்டி இப்போது மனிதனாகப் பிறந்துள்ளேன். இனிமேல் வைகுண்டப்பிறவி அடைவேன். இதுதான் நாராயண மந்திரத்துக்கு அர்த்தம்" என்று சொன்னது.
நாரதரும் ஓம் நமோ நாராயண மந்திரத்துக்கு அர்த்தம் தெரிந்துகொண்ட சந்தோஷத்துடன் குழந்தையிடம் விடை பெற்றார்.
ஆகவே குழந்தைகளே! நாம் நமக்கு ஏற்படும் சந்தேகங்களை உடனடியாக பெரியவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். நாம் சந்தேகம் கேட்டால் யாராவது சிரிப்பார்களோ என்று தயங்கி நிற்கக் கூடாது.
நாமும் எப்போதும் பகவன் நாமாவை உச்சரித்து வந்தால், நம் வாழ்வில் உயர்ந்த பதவியை அடையலாம் என்பதை இந்த கதையின் மூலம் அறிந்து கொண்டோமல்லவா!
நாமும் எப்போதும் பகவன் நாமாவை உச்சரித்து வந்தால், நம் வாழ்வில் உயர்ந்த பதவியை அடையலாம் என்பதை இந்த கதையின் மூலம் அறிந்து கொண்டோமல்லவா!
ஓம் நமோ நாராயணா ....
"நாராயண மந்த்ரம், அதுவே நாளும் பேரின்பம் !"
*With inspiration and contribution from Karthik.