பூக்களில் மிகுந்த நறுமணம் உடையது தாழம்பூ. ஆனால் இதை எந்த சிவன் கோயில்களிலும் பூஜைக்கு பயன் படுத்துவதில்லை. சிவராத்திரி அன்று ஒருநாள் மட்டுமே தாழம்பூவை பூஜைக்கு பயன் படுத்துவர். ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்ற கேள்விக்கு விடை தேடினேன். வாருங்கள் குழந்தைகளே தாழம்பூவின் கதையினை இப்பதிவில் காண்போம்.
ஒருமுறை பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் யார் பெரியவர்கள் என்ற போட்டி ஏற்பட சிவபெருமான் அவர்களின் சண்டையை தீர்த்து வைக்க அவர்களுக்குள் ஒரு போட்டி வைக்கிறார். தான் விஸ்வரூபம் எடுத்தவுடன் என்னுடைய ஜடா முடியை ஒருவர் தொட வேண்டும். மற்றொருவர் பாதத்தை தொட வேண்டும், யார் முதலில் தொடுகிறீர்களோ அவரே பெரியவர் என்று கூறினார்.
உடனே பிரம்மா பறவையாக மாறி, ஜடாமுடியை தேடிச் செல்கிறார். விஷ்ணு வராகியாக மாறி பாதத்தை தேடி பூமிக்குள் செல்கிறார். இருவரும் தேடிக்கொண்டே செல்கின்றனர்.
பல நாட்கள் ஆன பிறகு விண்ணில் இருந்து ஒரு தாழம்பூ வருகிறது. அந்த தாழம்பூவிடம் பிரம்மா "எங்கிருந்து வருகிறாய்?", என்று கேட்கிறார். சிவன் தலையில் இருந்து வருவதாக தாழம்பூ கூறுகிறது.
உடனே பிரம்மா தான் முதலில் வெற்றி பெற வேண்டும் என்பதால் தாழம்பூவிடம் "சிவன் தலையை தொட்டு பூவை எடுத்தேன் என பொய் சொல்ல வேண்டும்" என்று கூறுகிறார். தாழம்பூவும் அதற்கு ஒப்புக்கொண்டது.
போட்டியின் முடிவில் பிரம்மா பொய் சொன்னது சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் தெரிய வருகிறது. இதனால் கோபமடைந்த சிவபெருமான் "இனி உனக்கு பூலோகத்தில் ஆலயமே இருக்காது" என்று சாபம் அளிக்கிறார். அதே போல் "பொய்க்கு உடந்தையாக இருந்த தாழம்பூ இனி என் பூஜைக்கு வர மாட்டாய்!" என தாழம்பூவுக்கும் சாபம் அளிக்கிறார்.
ஆனால் மகாசிவராத்திரி அன்று மூன்றாம் கால பூஜைக்கு மட்டும் (நள்ளிரவு பூஜை) தாழம்பூ சாற்றப்படுகிறது. பார்த்தீர்களா குழந்தைகளே! தாழம்பூவுக்கு நேர்ந்த கதியை. ஆகையால் எந்த காலத்திலும், யாருக்காகவும் நாம் பொய் சொல்ல கூடாது. அப்படி செய்தால் நாம் இறைவனின் கோபத்திற்கு ஆளாகி விடுவோம்.
எப்போதும் எல்லோருக்கும் உண்மையாக இருந்து இறைவனின் அருளை பெறுவோமாக!