View in English
ஆடிப்பூரம் - திங்கட்கிழமை, 01/08/2022
ஆண்டாள் அவதார தினம்
ஸ்ரீ வில்லிபுத்தூர் நந்தவனத்தில் ஒரு துளசி செடியின் அடியில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் மகாலட்சுமியே ஆண்டாளாக அவதாரம் செய்தார். இது தேவிக்குரிய திருநாளாகும்.இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன.
ஆண்டாள் தமிழகத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடல் தொகுப்புகளை இவர் இயற்றியுள்ளார்.
வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை நமக்கு எடுத்துரைக்கிறது. மேலும், ஆண்டாள் பூமா தேவியின் அவதாரமாக கருதப்படுகிறார்.
மகாலட்சுமி ஆண்டாளாக அவதாரம் செய்த வரலாறு
மதுரைக்கு அருகிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வாழ்ந்து வந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர் ஒருவரால் ஒரு குழந்தையாக துளசிச் செடியின் கீழ், ஆண்டாள் கண்டெடுக்கப்பட்டாள்.
இவ்வந்தணர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சமேத அரங்கநாதர் கோவிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர். தனக்கெனக் ஒரு குழந்தை இல்லாதிருந்த நிலையில், தான் கண்டெடுத்த குழந்தையை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வந்தார்.
ஆயர் குல பெருமை அறிந்த பெரியாழ்வார் அக்குழந்தைக்கு கோதை என பெயரிட்டார்.
இளம் வயதிலேயே, தனக்குத் தெரிந்த சமயம் சார்ந்த கருத்துக்கள் மற்றும் தமிழ்மொழி போன்ற அனைத்தையுமே பெரியாழ்வார் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். இதனால் கோதை இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும் தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார்.
சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக் கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார்.
சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக் கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார்.
பெரியாழ்வார், ஆண்டாளை கண்டெடுத்த நந்தவனம் |
நந்தவனத்தின் மலர்களை தினமும் பறித்து மாலையாக தொடுத்து ரெங்கமன்னாருக்கு வழங்குவது ஆழ்வாரின் முக்கியப்பணியாகும். மாதவனின் தோளைத் தழுவும் அந்த மாலையை அவர் மீது கொண்ட காதலால் ஆண்டாள் தம் கழுத்தில் அணிந்து அழகு பார்த்து அதன் பின் பெருமாளுக்கு அனுப்பி வைப்பாள்.
கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி |
கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, ஸ்ரீரங்கம் கோயிலில் பள்ளிகொண்டிருக்கும் இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துவருமாறு பணித்தார்.
குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கோயில் கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள் என்று கூறுகிறது ஆண்டாள் வரலாறு.
ஆண்டாள் திருக்கல்யாணம் |
அன்னைக்கு வளைகாப்பு
ஆடிப்பூரத்தில் அவதரித்த அம்மன் உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது.
ஆடிப்பூரம் நாளில் சிவ ஆலயங்களில் அன்னைக்கு வளைகாப்பு நடத்துவார்கள். தாய்மை பேறுக்காக தவமிருக்கும் பெண்கள் அன்னைக்கு வளைகாப்பு நடத்துவதற்காக வளையல்களை வாங்கிக் கொடுத்து தங்களுக்கும் விரைவில் வளைகாப்பு நடைபெற வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள்.
நாமும் இந்நன்னாளில் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம், ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம், கனகதாரா ஸ்தோத்திரம் போன்ற ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்து வாழ்வில் பல பாக்கியங்களை பெறுவோமாக !