மஹா சங்கடஹர சதுர்த்தி - 25/08/2021

விநாயகர் பெருமை

அனைத்து எழுத்துக்கும், ஓசைகளுக்கும், வேதங்களுக்கும் மூலமாக விளங்குவது "ஓம்" எனும் பிரணவம். பிரணவத்தின் தோற்றத்தை எப்படி யாராலும் அறிய முடியாதோ அவ்வாறே விநாயகரின் தோற்றத்தையும் யாராலும் அறிய முடியாது.
தொடக்கம் என்பது இருந்தால் தான் முடிவு என்பது உண்டு. ஆகவே முதலும், முடிவும் இல்லாத முழு முதற் கடவுள் விநாயகர். அம்மையும் அப்பனும் இவரை கணங்களுக்கெல்லாம் தலைவராக்கியதால் இவர் "கணபதி, கணேசன், கணநாதர், கணாதிபன்" என்றெல்லாம் போற்றப்படுகிறார்.
விநாயகர் முன் தோப்புக்கரணம் இடுவதால், அறிவு வளர்ச்சியும், உடல் நலமும் உண்டாகும்.

இவரது கருணையால் காவிரி நம் தமிழகத்தில் ஓடத்துவங்கியது. ஸூர்ய வம்சத்தினரால் வழிவழியாக பூஜிக்கப்பட்ட "ஸ்ரீ ரங்கநாத பெருமாள்" ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளி, இந்த பூலோகத்தில் அருள் புரிவது விநாயகர் கருணையால் தான்.

வன்னிமரம்
வன்னி பத்திரம் விநாயக பெருமானுக்கு மிக மிக உகந்தது. அக்னிகளுக்கு இடையில் நின்று செய்த தவப்பயனும் யாகங்கள் செய்வதால் அடையும் புண்ணியமும் ஒரு வன்னி இலையால் விநாயகரை வழிபடுவோருக்கு கிடைக்கும்.

வன்னிமர விநாயகர் மஹிமை
பல நூறு வருடங்களுக்கு முன்பு விதர்ப்ப நாட்டை ஆண்டு வந்த மன்னன் ஒருவன் மக்களை கொடுமைப்படுத்தினான். மன்னன் செய்யும் பாவத்திற்கு துணையாக ஒரு அமைச்சரும் இருந்தார்.
இந்த மன்னனும் அமைச்சரும் அடுத்த பிறவியில் ஒருவரை ஒருவர் துரத்தி கொள்ளும்படியான அவதாரத்தை எடுத்தனர். எப்படி? காகமும் ஆந்தையுமாகவும், பாம்பும் தேளாகவும், நாயும் பூனையும், மீன் முதலாகவும் இப்படி ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளும் பிறவியாக அவதரித்தார்கள். இவர்களுக்கு மோட்சம் ஏற்படவில்லை.
அடுத்தடுத்து பிறவி எடுத்து ஒருவரை ஒருவர் சண்டை போட்டு சாகடிப்பது தொடர்ந்து வந்தது.
இந்த சம்பவம் தொடர, ஒருசமயம் மன்னனும் அமைச்சரும், வேடனும் ராட்சசனுமாக பிறந்தனர். ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டு செல்ல, ராட்சசனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வேடன் வன்னி மரத்தின் மேலே ஏறினான். அவன் ஏறும் சமயத்தில் வன்னி மரத்தில் உள்ள இலைகளானது, விநாயகரின் மீது விழுந்தது.
வேடனை துரத்தி சென்ற ராட்சசனும் வன்னி மரத்தின் மேலே ஏறினான். அந்த சமயத்தில் வன்னி மர இலைகள் விநாயகரின் மீது விழுந்தது. ஆகவே இருவரின் மூலமாக வன்னி மரத்து விநாயகர் வன்னி மரத்து இலைகளால் அர்ச்சனை செய்யப்பட்டார். அந்த சமயம் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில், இருவரும் தனது உயிரை இழந்து சிவலோகத்தில் மோட்சத்தை பெற்றனர் என்று கூறுகிறது வரலாறு.

வன்னி மரத்தடியில் ஸ்ரீஸங்கடஹர க்ஷிப்ர ப்ரஸாத கணபதி,
சேந்தமங்கலம், நாமக்கல்
இவ்வாறாக இவர்கள் இருவரும் செய்த பாவத்திற்கு மோட்சம் தந்த அந்த வன்னி மரத்தடி பிள்ளையார் நாம் முன் ஜென்மத்தில் செய்த பாவத்திற்கும் நன்மை செய்வார். இதன் மூலம் வன்னி மரத்தடி பிள்ளையாருக்கு அதிக சக்தி உண்டு என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. நாமும் வன்னி மரத்தடி பிள்ளையாரை மனதார நினைத்து நமது துன்பங்கள் தீர வேண்டிக்கொள்வோம்.
மஹா சங்கடஹர சதுர்த்தி

பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கட ஹர சதுர்த்தி ஆகும். சங்கட என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல் என்று பொருளாகும். நம் வாழ்வில் ஏற்படும் அனைத்து விதமான துன்பங்களையும் போக்கும் விரதமே இந்த சங்கடஹர சதுர்த்தி.
ஆண்டின் ஆவணி மாத காலத்தில் பௌர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியே மஹா சங்கட ஹர சதுர்த்தியாகும்.
இந்த சிறப்பான விரதத்தை அனுஷ்டித்தே அங்காரகன் என்ற செவ்வாய், நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை அடைந்தார். கிருஷ்ணர், புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹரசதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றனர்.
சிவனைப் பிரிந்த சக்தி இந்த விரதத்தை மேற்கொண்டுதான் சிவனை அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. கிருதவீரியன் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொண்டுதான் கார்த்தவீரியன் என்ற மகனைப் பெற்றான். பாண்டவர்கள்கூட இந்த விரதம் இருந்தே வெற்றி பெற்றனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. எண்ணியது யாவற்றையும் அளிக்கும் இந்த சங்கட ஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதம்.
சங்கடஹர சதுர்த்தி விரத மகிமை
தன்னைக் கிண்டல் செய்த சந்திரனின் ஆணவத்தைக் கண்டித்து சாபமிட்டார் விநாயகப்பெருமான். ஆணவம் ஒழிந்த சந்திரன் இந்த சதுர்த்தி நாளில்தான் அனுக்கிரஹம் பெற்றான்.

எனவே இந்த நாளில் கணபதியை தரிசித்து விட்டு சந்திரனைக் காணலாம் என்று சொல்லப்படுகிறது. வாழ்வின் எல்லா நலன்களையும் அளிக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் மகிமையை உணர்ந்து பலன் பெறுவோம்.
ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிக்ஷமும் எல்லா செயல்களும் வெற்றியில் முடியும் என்பதை ஐயமில்லை.
கணேஷ ஸ்தோத்திரங்கள்
விநாயகர் அகவல் போன்ற ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்து விநாயகர் அருள் பெறுவோமாக!

