ஓம் நமசிவாய

01/03/2022 - மகாசிவராத்திரி


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் ⁠
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்


✴ ஒவ்வொரு மனிதனுக்கும் ’ஏழு பிறப்பு' என்பார்கள். அதேசமயம் ‘எழுபிறப்பு’ என்கிறது சாஸ்திரம். அதாவது எழுந்துகொண்டே இருக்கும் பிறப்பு என்று அர்த்தம். இப்படி எழுந்துகொண்டே இருக்கிற பிறப்புக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் உன்னத வழிபாடுதான் மகா சிவராத்திரி வழிபாடு!

✴ நாம் செய்த பாவக் கணக்குகள் அடையும் வரை, பிறவி தொடர்ந்துகொண்டே இருக்கும். பிறவிக்கடனை அடைப்பதற்குத்தான் புண்ணியங்களும் வழிபாடுகளும்! அந்தப் புண்ணியங்கள் கிடைப்பதற்குதான், சிவ வழிபாடு, மகாசிவராத்திரி வழிபாடு முதலானவை கைகொடுத்து தூக்கிவிடுகின்றன.

✴ மாசி மாதத்தின் மகத்துவங்களில் ஒன்று மகாசிவராத்திரி. பிரம்மாவும் மஹாவிஷ்ணுவும், சிவபெருமானின் முடி - அடி தேடிய நிகழ்வு நிகழ்ந்தது ஒரு மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி தினம் என்கிறது புராணம். அந்த நாளே மகாசிவராத்திரி எனக் கொண்டாடப்படுகிறது.

மகா சிவராத்திரி தத்துவம்

🔥அமாவாசைக்கு முந்தையநாள், சந்திரனின் மிகச்சிறிய அளவு இருப்பது போல, நம் மனதிலும் ஆசை, களவு, காமம், கோபம் என மிகச்சிறிய அளவிலே இருக்கும். அதையும் அகற்றவேண்டும். அதுவும் நம் மனதில் இருந்து அகலவேண்டும். அப்படி அவற்றை முழுவதும் அகற்றினால்தான், இந்தப் பிறவியில் இருந்து நாம் விடுபட்டு, சிவனாரின் பாதக்கமலங்களை அடையமுடியும். அப்படி அடைவதற்காக சிவபெருமானை வழிபடும் உன்னதநாள்தான் சிவராத்திரி. மகா சிவராத்திரி!

🔥 'ராத்திரி' என்பதற்கு 'இரவு' என்று பொதுவான அர்த்தம் கூறினாலும் 'ராத்ரம்' என்பதற்கு 'அறிவு' என்னும் பொருளும் உண்டு என்பர். சிவராத்திரியானது இந்த உலகின் தலைவனான எம்பெருமான் சிவபெருமானை நமக்கு உணர்த்தி அனுபவிக்கச் செய்வதினால் அனைத்து வழிபாடுகளிலும் சிவராத்திரி அன்று செய்யப்படும் சிவ வழிபாடு மிகுந்த பலன்களை அளிக்க வல்லது என்கின்றன சாஸ்திரங்கள்.

🔥 பொதுவாக, ராத்திரி என்பது, எந்தவொரு வேலையும் செய்யாமல் இருள் சூழ்ந்திருக்க உயிர்கள் அனைத்தும் உறங்கும் காலம். பகலெல்லாம் வேலை செய்த நாம், இரவில் தூங்குகிறோம். அவ்வாறு உறங்கி எழுந்தால்தான், உடலுக்கு ஆரோக்கியமும் சுறுசுறுப்பும் ஏற்படுகின்றன. உறக்கம் இல்லாவிட்டால், உடலும் புத்தியும் சுறுசுறுப்பாக வேலை செய்வதில்லை.

🔥பகலெல்லாம் அலைந்து திரிந்த நம் உடலும் இந்திரியங்களும் சக்தியை இழந்து ஓய்வு பெறுகின்றன. அப்போது நம் இதயத்தில் உள்ள ஈஸ்வரன், நம் ஜீவனை அணைத்துத் தன்னருகில் அமா்த்துகிறாா். அப்போது கண்கள் காண்பதில்லை; காதுகள் கேட்பதில்லை; புத்தி எதையும் நினைப்பதில்லை.

🔥 தூங்கி எழுந்ததும், `சுகமாகத் தூங்கினேன்' என்கிறோம். அப்போது, நாம் இழந்த சக்தியை பகவான் நமக்குத் தந்து அனுப்புகிறாா். ஒருவகையில் சா்வேஸ்வரன் நமக்குத் தந்த வரமே, தூக்கமாகும். அதேநேரம் அளவு கடந்தும் தூங்கக்கூடாது.


🔥 ஒரு முறை பூமியில் மகா பிரளயம் ஏற்பட்டது. அப்போது பிரம்ம தேவரும், மற்ற பிற உயிர்களும் முற்றிலும் அழிந்து போயின. அவர்களை காப்பாற்ற அன்னை பார்வதி தேவி இரவு பூஜையில் சிவ பெருமானை நினைந்து பூஜிக்க ஆரம்பித்தார். அன்று இரவு முழுவதும் சிவ நாமத்தை உச்சரித்து பூஜை செய்ததன் பலனாக அனைத்து உயிர்களும் காப்பாற்றபட்டன. 

🔥 அன்னையானவள் சிவனை வணங்கி பூஜை செய்த அந்த ராத்திரி சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. மாசி மாதம் இந்த நிகழ்வு நடைபெற்றதால் இன்றும் மாசியில் வரும் சிவராத்திரிக்கு மகத்துவம் வாய்ந்த பலன்கள் உண்டு. அதனால் தான் மாசியில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நலம் தரும் நான்கு கால பூஜை

மழலைச் செல்வம் வேண்டுவோர் வணங்க வேண்டிய முதற்காலம்


💫 மாலை 6.27 முதல் கால பூஜை தொடங்கும். இந்தக் காலத்தில் சிவபெருமானை ஶ்ரீசோமாஸ்கந்தராக வழிபட வேண்டும். 'ஸ + உமா + ஸ்கந்தர்' என்பதே இணைந்து சோமாஸ்கந்தராக மாறியது. அதாவது உமை மற்றும் கந்தனுடன் விளங்கும் சிவபிரான் என்பது இதன் பொருள். இறைவன், இல்லறத்தனாக - இனிய கணவனாக - பாசமுள்ள தந்தையாக தனயனுடன் காட்சியளிக்கும் இந்தக் கருணை வடிவம், தரிசித்து மகிழ வேண்டியது ஒன்று. 


கல்விச் செல்வம் அருளும் இரண்டாம் கால தட்சிணாமூர்த்தித் திருக்கோலம்

💫 இரண்டாம் கால பூஜைகள் இரவு 9.27 முதல் நள்ளிரவு 12.33 வரை நடைபெறும். இந்த பூஜையில் நாம் ஈசனை ஸ்ரீதட்சிணாமூர்த்தியாக வழிபடுவது சிறந்தது.


💫 கல்வி, யோகக்கலை, இசை மற்றும் கலைகளைக் கற்பிக்கும்  திருக்கோலமே ஸ்ரீதட்சிணாமூர்த்தித் திருவடிவம். 


ஶ்ரீலிங்கோத்பவர் மூன்றாம் கால பூஜை - இரவு 12.00 மணி 

💫 ‘லிங்கம்’ என்றால் உருவம். ‘உற்பவம்’ என்றால் வெளிப்படுதல் என்று பொருள். லிங்கோற்பவம் என்ற சொல்லுக்கு, ‘உருவமற்ற இறைவன் வடிவம் கொள்ளுதல்’ என்று பொருள். லிங்க பாணத்தின் நடுவில், சந்திரசேகர திருமேனிபோல் அமைந்திருப்பதே லிங்கோத்பவ வடிவம். இரண்டு, நான்கு அல்லது எட்டுக் கரங்களுடன் சிவபெருமான் திகழ... பிரம்மாவும் திருமாலும் இருபுறமும் வணங்கிய நிலையில் இருப்பர்.


💫 
இறைவனின் இத்திருக்கோலத்தை மூன்றாம் கால பூஜையின் போது நினைத்து வழிபட சகல செல்வங்களும் கிடைப்பதோடு இறைவனின் பரிபூரண ஆசியும் கிட்டும். ஞானமும் மோட்சமும் கிட்டும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீரிஷபாரூடர் நான்காம் கால பூஜை - அதிகாலை  4.00 மணி 

💫  சிவபெருமானின் திருக்கோலங்களுள் உன்னத வடிவாகத் திகழ்வது ரிஷபாரூட மூர்த்தி. திருக்கோயில் திருவிழாக்களில் பெருமானின் ரிஷப வாகனக் காட்சி காண அடியார்கள் காத்து நிற்பர்.


💫  இந்தத் திருக்கோலத்தில் இறைவனை வழிபட்டுப் பூஜை செய்ய வேண்டியது நான்காம் காலம். நான்காம் கால பூஜையில் கலந்துகொண்டு வழிபாடுகள் செய்தால் அவர்களுக்கு வேண்டும் சௌபாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.


மகா சிவராத்திரியின் மகிமை

🕉 வேதங்கள் இறைவனால் அருளப்பட்டவை என்றாலும், அவை இறை வடிவங்களே என்பது நம்பிக்கை. ஒவ்வொரு வேதத்துக்கும் ஒவ்வொரு தேவதை உண்டு. நான்கு வேதங்களில் நடுநாயகமாகத் திகழும் வேத பாகம், யஜுர்வேத ஶ்ரீ ருத்ரம். 

🕉அந்த ஶ்ரீ ருத்ரத்திலும் மத்தியில் இருக்கும் சொல், 'சிவ' என்பது. இந்த சிவ என்னும் வார்த்தையைச் சொல்ல, சகல வேதங்களையும் சொன்ன பலன் கிடைக்கும் என்பது ஐதிகம். எளிதில் அனைவராலும் சொல்ல முடிகிற மந்திரம், சிவ மந்திரம். அந்த சிவ மந்திரத்தைத் தவறாமல் உச்சரிக்கவேண்டிய தினம், சிவராத்திரி.

🕉  இந்த உலகில் நன்மை தீமைகளைத் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் ஒரே பலன்தான்.  தெரியாமல் செய்ததனால் நமக்கு வரவேண்டிய நன்மை தீமைகள் வராமல் போகாது. அதுதான் சிவராத்திரி மகிமை நமக்குச் சொல்லும் பாடம்.

🕉  குரங்கு ஒன்று வில்வ மரத்தின் மீதமர்ந்து இரவு முழுவதும் இலைகளைப் பிய்த்து கீழே போட்டுக்கொண்டே இருந்தது. இலைகள் விழுந்த இடத்தில் இறைவனின் லிங்கத் திருமேனி. அன்றைய இரவு மகாசிவராத்திரி. விடியும் வேளையில் அறியாமல் செய்த வில்வார்ச்சனைக்கு இறைவன், குரங்கை மறுபிறவியில் சக்கரவர்த்தியாகப் பிறக்க அருள் செய்தார். சக்கரவர்த்தியாய் பிறந்தவரே முசுகுந்த சக்கரவர்த்தி.

🕉 தனக்கு வாய்த்த வரத்தை அறிந்ததும் முசுகுந்தர் வேண்டிக்கொண்டது என்ன தெரியுமா... அறியாமல் சிவபூஜை செய்த குரங்குக்கே இறைவன் இவ்வளவு பெரிய பதவியை அருள்வார் என்றால், அறிந்தே சிவபூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் எவ்வளவு இருக்கும் என்று இந்த உலகம் அறிந்துகொள்ள, "சக்கரவர்த்தியாய் பிறந்தாலும் தன் குரங்குமுகம் மாறக்கூடாது" என்று வேண்டிக்கொண்டார்.



அதனால்தான், நன்மைகளை அறியாமல் செய்தால்கூட நன்மையே உண்டாகும் என்கின்றனர் பெரியோர்கள். சிவராத்திரி நாளை அறியாமல், உயிருக்குப் பயந்து மரத்திலேறிய வேடன், கீழே விழுந்துவிடக்கூடாது என்று இரவெல்லாம் விழித்திருந்து இலைகளைப் பறித்துப் போடுகிறான். அதுவே சிவார்ச்சனை ஆனது. 





அதன் பலனாக, அவன் மறுபிறவியில் ராமனையே தோழனாகக்கொள்ளும் குகப் பதவியை அடைந்தான்.


இவையெல்லாம் நமக்குத் தெரிவிக்கும் செய்திகள் இரண்டு.

1. இரவெல்லாம் விழித்திருப்பது
2. இறைவனை வழிபடுவது.


'இறைவா உன் திருவடி கண்டதால், நான் இப்போது வீடுபேறு உற்றேன்' என்னும் சிவபுராண வரிகளை நாம் மனம் உணர்ந்து பாடும்போது, உண்மையிலேயே சிவனருளும் சிவதரிசனமும் பரிபூரணமாகக் கிடைக்கும்.

ருத்ர பாராயணம், சிவ புராணம், சிவ ஸ்தோத்திரங்களான லிங்காஷ்டகம், ஸ்ரீ வைத்தியநாத அஷ்டகம், கோளறுபதிகம் மற்றும் எளிய சிவ ஸ்லோகங்கள் போன்றவற்றை பாராயணம் செய்து சிவ சிந்தனையில் திளைப்போம்.

இதில் மற்றுமொறு சிறப்பும் உண்டு. மற்ற மாதங்களில் சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்க முடியாதவர்களும் மாசி மாதத்தின் மகா சிவராத்திரி விரதமிருந்து வழிபாடு செய்தால் ஓர் ஆண்டின் அனைத்து சிவராத்திரிகளிலும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்கிறார்கள். எனவே தவறாமல் மகாசிவராத்திரி நாளில் நாம் வழிபாடுகள் செய்து அவனருளாலே அவன் தாள் வணங்கி வீடுபேறு பெறுவோமாக!

 தென்னாடுடைய சிவனே போற்றி !

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!!  


நன்றி : விகடன்

Post a Comment

Previous Post Next Post
Youtube Channel Image
We're now on YT! Subscribe to our Slokas for All Youtube Channel
Subscribe